Published : 08 Jul 2019 03:10 PM
Last Updated : 08 Jul 2019 03:10 PM

கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் அரசு தான் நிலைக்கும்: ஸ்டாலின் பேச்சு

நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கல்வியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் அரசு தான் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) கொளத்தூர் தொகுதியில் இருக்கும் லூர்து மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரம்பூர் சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவியருக்கு நோட்டுப் புத்தகம், விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"நாட்டில் ஆட்சி செய்வதற்கு பல கட்சிகள் வரலாம். ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் பல திட்டங்களை நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகச் செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி கல்விக்கு எந்த அரசு முன்னுரிமை தருகின்றதோ அந்த அரசுதான் நிலைத்து நின்றிருக்கிறது.

கல்விக்கு முக்கியத்துவம் தந்த தலைவராக விளங்கியவர்கள் காமராஜரும் கருணாநிதியும். 1989-90 ஆம் ஆண்டு தொடக்க காலத்தில் நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தேன். அப்பொழுது நான் சட்டப்பேரவையில் முதன்முதலில் பேசக்கூடிய கன்னிப் பேச்சில், நான் அப்போதைய திமுக அரசிடம் எடுத்து வைத்த கோரிக்கை, கல்வியினுடைய பிரச்சினையை தீர்ப்பது தான்.

மாணவர்களுக்கும் கல்விக்கும் இந்த ஆட்சி எவ்வளவு செய்துகொண்டிருக்கின்றது? மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நான் எடுத்து வைத்தேன்.

ஏற்கெனவே போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே அது நடக்காது, முடியாது என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் திட்டவட்டமாகப் பதிலளித்தார்.

ஆனால், முதல்வராக இருந்த கருணாநிதி சட்டப்பேரவையில், எவ்வளவு நஷ்டம் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. மாணவர்களின் கல்வியின் தரம் உயர வேண்டும். எனவே மாணவர்களை ஊக்கப்படுத்த இலவச பஸ் பாஸ் திட்டம் ஒன்றை அறிவித்தார். அது இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதுமட்டுமல்ல கல்வி அனைவருக்கும் சமமாக இருந்திட வேண்டும் என்பதற்காகத்தான் 'சமச்சீர் கல்வி' என்ற திட்டத்தை கருணாநிதி நிறைவேற்றித் தந்தார்.

திமுக இன்றைக்கு ஆட்சியில் இல்லை என்று சொன்னாலும் எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் கல்வியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x