நடிகர் சங்கத் தேர்தல்; விஷால் கோரிக்கை நிராகரிப்பு: வாக்குகளை எண்ண உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

நடிகர் சங்கத் தேர்தல்; விஷால் கோரிக்கை நிராகரிப்பு: வாக்குகளை எண்ண உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு
Updated on
1 min read

நடிகர் சங்கத் தேர்தல் வழக்கில் தொடர்புடையவர்களின் விளக்கத்தைக் கேட்காமல் வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு பதிவாளரின் உத்தரவுக்குத் தடைவிதித்து தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதே சமயம் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என்றும், வாக்குப் பெட்டிகளைப் பாதுகாத்து வைக்கவும் ஜூன் 21-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கே.ராஜன், ஜெயமணி, ஆர்.கார்த்திக், சுமதி, சாந்தி உட்பட 10 நடிகர் சங்க உறுப்பினர்கள் தங்களையும் வழக்கில் இணைக்கக் கோரி இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

விஷால் வழக்கில் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய இடையீட்டு மனுதாரர்களுக்கு அனுமதி அளித்து வரும் 12-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, வாக்குகளை எண்ண அனுமதி அளிக்கக் கோரி விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கில் தொடர்புடைய பிற எதிர் மனுதாரர்களின் விளக்கத்தைக் கேட்காமல் வாக்குகளை எண்ண அனுமதிக்க முடியாது என தெரிவித்துவிட்டார்.

இதற்கிடையில்  தங்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டதாக பெஞ்சமீன், திம்மராசு, சிங்காரவேலன் ஆகியோர் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தான்  தொடர முடியும் என நீதிபதி தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்டு வேறுவகையில் தங்கள்  மனுக்களை எடுத்துச் செல்வதாகக் கூறி, மனுக்களை திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in