Published : 07 Jul 2019 09:47 AM
Last Updated : 07 Jul 2019 09:47 AM

படுக்கை வசதி கொண்ட அரசு விரைவுப் பேருந்துகளில் வார நாட்களில் 10% கட்டண குறைப்பு: முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளதாக அமைச்சர் தகவல்

ஆம்னி பேருந்துகளைப் போல படுக்கை வசதி கொண்ட அரசுப் பேருந்துகளிலும் திங்கள் முதல் வியாழன் வரையிலான வார நாட்களில் 10 சதவீத கட்டண குறைப்பு செய்வதற்காக முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட பேருந்து கூண்டு கட்டுமான தொழிலை சரிவிலிருந்து மீட்டு 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதற்காக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, கரூர் மாவட்ட பேருந்து கூண்டு கட்டுமான நிறுவனங்கள் சார்பில் பாராட்டு விழா கரூரில் நேற்று நடைபெற்றது.

விழாவில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:

தமிழக அளவில் பேருந்து கூண்டு கட்டுவதில் கரூர் தனியிடம் பெற்றுள்ளது. அரசுப் பேருந்துகளுக்கு அதிகளவில் கரூரில்தான் கூண்டுகள் கட்டப்பட்டன. தமிழகத்தில் இயங்கும் 95 சதவீத பேருந்துகளுக்கு கரூரில்தான் கூண்டு கட்டப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க அனுமதியளித்தார். அதன்பின், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க அனுமதியளித்தார்.

பேருந்துகளுக்கான சேசிஸ் அரசுக்கு விற்கும் தனியார் நிறுவனமே கூண்டையும் கட்டித் தருவதாகத் தெரிவித்தது. ஆனால், சேசிஸ் மட்டுமே வாங்கிக்கொண்டு, கூண்டை நாங்கள் கட்டிக் கொள்கிறோம் எனத் தெரிவித்துவிட்டோம்.

இந்த 5 ஆயிரம் பேருந்துகளில் சென்னை, செங்கல்பட்டு, பெங்களூரு ஆகிய இடங்களில் 500 பேருந்துகளுக்கு கூண்டு கட்டப்பட்ட நிலையில், 4,500 பேருந்துகளுக்கு கரூரில்தான் கூண்டுகள் கட்டப்பட்டன.

தமிழகத்தில் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 1.80 கோடி பேர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் லாபநோக்கமன்றி பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. 2 கழிப்பறைகளுடன் கூடிய பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டுள்ளன. கழிப்பறைகளுடன் கூடிய 40 பேருந்து கள் விரைவில் இயக்கப்படும்.

குளிர்சாதன பேருந்துகளில் இருபுறமும் 2 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருபுறம் 2, மறுபுறம் 3 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனால் பயணக் கட்டணம் குறையும் என்பதால் சாதாரண மக்களும் ஏசி பேருந்துகளை பயன்படுத்துவார்கள். குறைந்த தொலைவுக்கு 100 ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக படுக்கை வசதி கொண்ட அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளில் திங்கள் முதல் வியாழன் வரை குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல, படுக்கை வசதி கொண்ட அரசுப் பேருந்துகளிலும் திங்கள் முதல் வியாழன் வரையிலான வார நாட்களில் 10 சதவீத கட்டண குறைப்பு செய்வதற்காக முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்றார்.

விழா நடைபெற்ற மண்டப நுழைவாயில் பகுதி பேருந்துபோல வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது அனைவரையும் கவர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x