Published : 19 Nov 2014 02:27 PM
Last Updated : 19 Nov 2014 02:27 PM
தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இத்தகவலை இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து இந்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும், இவ்விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இலங்கை அதிபர் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்துள்ளார்.
போதை மருந்து கடத்தல் வழக்கில் தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோருக்கு இலங்கை நீதிமன்றம் கடந்த அக்டோபர் 30-ம் தேதி மரண தண்டனை விதித்தது. மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுத்தன. 5 பேரின் சார்பில் கடந்த 11-ம் தேதி மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனிடையே, மீனவர்களை விடு விப்பது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் தொலைபேசியில் பேசினார். மீனவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றால்தான் அவர் களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அதிபரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக மீனவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்ச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 5 மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT