Published : 13 Jul 2019 11:55 AM
Last Updated : 13 Jul 2019 11:55 AM

அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழ் ரத்து: இனி இந்தி மொழி பேசுவோரைப் பணி அமர்த்தும் திட்டம் தடையின்றி நடக்கும்; வைகோ விமர்சனம்

அஞ்சலகப் பணியாளர்கள் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வினாத்தாள் இடம்பெறச் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவை இந்தி நாடாக கட்டமைக்கும் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் பாஜக அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற உத்தரவு, மும்மொழிக் கொள்கையைத் திணிக்க புதிய கல்விக் கொள்கை போன்றவற்றால் பல்வேறு மொழிகளைக் கொண்ட தேசிய இனங்களின் மொழி உரிமையைத் தகர்த்துவிட்டு, ஒரே மொழி எனும் நிலையை நடைமுறைப்படுத்த பாஜக அரசு முனைந்திருப்பது, ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் செயலாகும்.

மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதில் பாஜக அரசின் நோக்கங்களை வெளிப்படுத்துகிறது.

"ஐக்கிய நாடுகள் சபையில் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. இந்தி மொழியை வெளிநாடுகளில் பரப்பவும், பிரபலப்படுத்தவும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.43 கோடியே 48 லட்சம் செலவிடப்பட்டு இருக்கிறது. 2018 மார்ச் மாதம், ஐநா கருத்தாக்கங்களை இந்தியில் வெளியிட இரு ஆண்டுகளுக்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது.

அண்மையில் ஐநாவின் ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் இந்தி மொழியில் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது" என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் இந்திமொழி வளர்ச்சித் திட்டங்கள், திணிப்புகள் தொடரும் நிலையில், மாநில மொழிகளின் உரிமைகளை மறுப்பதிலும் முனைப்பாக உள்ளது. இந்தி எதேச்சாதிகாரத்தின் கொடுங்கரங்கள், இந்தியாவில் இந்தி தவிர பிற மொழி பேசும் மக்களின் வேலைவாய்ப்புக்களையும் தட்டிப் பறிக்கின்றன.

இந்திய அஞ்சல்துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள், மெயில் கார்ட், அஞ்சல்காரர், அஞ்சலக உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் போன்ற பணி இடங்களுக்காக தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அஞ்சல்துறைப் பணிகளுக்கான தேர்வுப் பாடத் திட்டங்கள் கடந்த மே 10 ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டன. பின்னர் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு அஞ்சல்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பல்வேறு அஞ்சல்துறை பணி இடங்களுக்கு நாடு முழுதும் இனி ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படும்.

இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே இருக்கும். அதன்படி இனி தபால்துறைத் தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே இருக்கும். அந்தந்த மாநில மொழிகள் அதில் இடம்பெறாது என்றும் மத்திய அரசின் சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த அஞ்சலகப் பணியாளர்கள் தேர்வில் ஹரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தோர் அதிக மதிப்பெண்கள் பெற்றதாகக் கூறி, தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் பணி வாய்ப்பு பெற்றனர். இந்தி, ஆங்கிலம் இவற்றோடு, தமிழ் மொழியும் இடம் பெற்றிருக்கும்போதே அஞ்சல்துறையில் வட மாநிலத்தவர்கள் புகுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே அஞ்சல்துறைப் பணியாளர்கள் தேர்வு நடத்தப்பட்டால், இனி முழுக்க முழுக்க இந்திக்காரர்கள் ஆதிக்கம்தான் அஞ்சல்துறையில் கொடிகட்டிப் பறக்கும். தமிழகத்தில் குக்கிராமங்களில் உள்ள அஞ்சலகங்களில்கூட இனி இந்தி மொழி பேசுவோரைப் பணி அமர்த்தும் திட்டம் தடையின்றி நடக்கும். மொழிப் பிரச்சினையால் அஞ்சல் சேவை மற்றும் தகவல் தொடர்புகளும் பெரிதும் பாதிக்கப்படும்.

மத்திய அரசுத் துறைகளில் தமிழர்களின் வேலைவாய்ப்புக்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாரி வழங்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியதும், நியாயப்படுத்தவே முடியாத அக்கிரமச் செயலும் ஆகும்.

அஞ்சலகப் பணியாளர்கள் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே வினாத்தாள் இருக்கும் என்பதை மாற்றி, தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வினாத்தாள் இடம்பெறச் செய்ய வேண்டும்", என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x