Published : 30 Nov 2014 11:55 AM
Last Updated : 30 Nov 2014 11:55 AM

வாசனின் காமராஜர் ஆட்சி: வேள்விக்குத் தயாராகுமா தமாகா?

தமிழகத்தில் 2016-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்குரிய அங்கீகாரத்தைப் பெற ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி அதற்கான பணிகளை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் அறி முகக் கூட்டம் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிர்வாகிகள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் தொண்டர்கள் வந்தது கூட்டத்தில் பங்கேற்ற ஜி.கே.வாசன் உள்ளிட்ட அனைத்து தலை வர்களுக்கும் பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

முதல்வரே... கோஷத்துக்கு எதிர்ப்பில்லை

இந்த கூட்டத்தில் பேசிய பலரும் 2016-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா வெற்றி பெற்று ஜி.கே.வாசன் முதல்வராகப் பொறுப் பேற்று ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான காமராஜர் ஆட்சியை தமிழகத்துக்கு தரவேண்டும் என்று தங்களின் விருப்பத்தை வாழ்த்தாகத் தெரிவிக்க மறக்கவில்லை. முன்பெல்லாம் கட்சிக் கூட்டங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வரும் ஜி.கே.வாசனை `வருங்காலத் தமிழக முதல்வரே' என விளித்துக் கோஷமிடும் தொண்டர்களைப் பார்த்து மிகக் கடுமையாக எச்சரிப்பார் ஜி.கே.வாசன். ஆனால், திருச்சி கூட்டத்தில் எழுந்த முதல்வர் கோஷத்துக்கு புன்னகை யையே தனது பதிலாகத் தந்தார் அவர்.

தமிழக அரசியலில் வெற்றிடம்?

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அதிமுக, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றது, அதன் தொடர்ச்சியாக முதல்வர் பதவியை இழந்தது மற்றும் திமுகவின் தொடர் தேர்தல் தோல் விகள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் ஆகியவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாஜக, தேமுதிக, தற்போது தொடங்கப்பட்டுள்ள தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றன.

நேர்மையான நிர்வாகிகள், மக்கள் சந்திப்பு

இந்நிலையில், 2016-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு என்பது பெரும் கனவு என் றாலும், இந்த தேர்தலில் வாசனுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் செல் வாக்கை உயர்த்த கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தொடங்கி தொண்டர்கள் வரை கடுமையான உழைப்பைத் தரவேண்டி யிருக்கும். ஆட்சிப் பொறுப்பு என்பதை அடிநாதமாக வைத்துக்கொண்டு, முதலில் 2016 தேர்தலில் வெற்றிக்கனியை ருசிக்க தமாகா பெரும் வேள்வி நடத்தவேண்டும்.

மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையே லட்சியமாகக்கொண்டு கட்சியைக் கட்டமைக்கும் விதம், தொண்டர்கள் மற்றும் மக்கள் எளிதில் அணுகும்படியான எளிமையான மற்றும் நேர்மையான மாவட்ட நிர்வாகிகள் நியமனம், இளைஞர் சக்தியை தம் வசம் திருப்பும் முயற்சிகள் மற்றும் வாசன் நேரடியாக நடத்தும் மக்கள் சந்திப்புகள் என்ற பெரும் வேள்வியை நடத்த வேண்டியிருக்கும் என்பதுதான் யதார்த்தம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x