பட்ஜெட்: 15 லட்சம் ரூபாயில் சிறு பகுதியாவது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது; வீரமணி விமர்சனம்

பட்ஜெட்: 15 லட்சம் ரூபாயில் சிறு பகுதியாவது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது; வீரமணி விமர்சனம்
Updated on
2 min read

நிதிநிலை அறிக்கையில், 15 லட்சம் ரூபாய் என்பதில் ஒரு சிறு பகுதியாவது கிடைக்கக்கூடிய அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் பதவியேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்று, அதன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'பட்ஜெட்' என்ற சொல் - நிதியமைச்சர் கொணரும் பையையே குறிக்கும் சொல். கைப்பெட்டிக்குப் பதில் அச்சொல்லுக்கேற்ப, பையிலே கொண்டு வந்து நிதிநிலை அறிக்கையைப் படித்தார்.

பெண் ஒருவர் நாட்டின் வரவு - செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் தகுதியும், உரிமையும் பெற்றிருப்பது இது இரண்டாம் தடவை. முன்பு இந்திரா காந்தி. இப்போது நிர்மலா சீதாராமன்.

அறிக்கையில் பன்மொழிகள் என்பது - சமைத்த  சமையல்மீது தூவப்படும் வாசனைப் பொடியே!

அவர் சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் பன்மொழிகளின் மேற்கோள்கள் பளிச்சிட்டன. புறநானூற்று பிசிராந்தையாரிலிருந்து, உருது, இந்தி, சமஸ்கிருத சாணக்கியர் கூற்றுவரை இடம்பெற்றுள்ளன என்பதெல்லாம் சமைத்த பதார்த்தங்களுக்கு மேல் தூவப்படும் மிளகும் மற்ற வாசனைப் பொருட்கள் போன்றவையே!

வெகுமக்களும், விவசாயிகளும், வேலையில்லா பட்டதாரிகளும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர். மோடி முந்தைய 5 ஆண்டுகாலத்தில் அள்ளிவிட்ட ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, கருப்புப் பணத்தை மீட்ட நிலையில், ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரது வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் என்பதில் ஒரு சிறு பகுதியாவது கிடைக்கக்கூடிய அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க வழியில்லை

வேலையில்லாத் திண்டாட்டத்தினைத் தீர்க்கும் வகையில், இளைஞர்கள், படித்த பட்டதாரிகள் விரக்தியிலும், வறுமையிலும் உள்ள நிலையில் இப்பட்ஜெட்டில் பெரும் அளவில் அது போக்கப்படும் தீர்வு இருக்கும் என்று நியாயமாக எதிர்ப்பார்த்தார்கள்.

"விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு மடங்காகப் பெருக்கப்படும்" என்று உறுதி கூறப்பட்டது; ஆனால், உறுதியான செயல்பாட்டுக்குரிய ஆழமான திட்ட அம்சங்கள் ஏதும் இல்லை என்பதால், இன்றும் விவசாயிகளின் வேதனையும், கண்ணீரும் குறைந்தபாடில்லை. நாட்டின் அரைப் பகுதி வறட்சியின் பிடியில் - குடிநீர்ப் பஞ்சம் - தண்ணீர்ப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.

பிரதமர் கிசான் திட்டத்துக்கு நிதி குறைப்பு!

'பிரதமர் கிசான் திட்டம்' என்று விவசாயிகளுக்கு உரிய ஆதரவு விலை தரப்பட வழிவகை செய்யப்படும் என்று முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டது. அதை முழுமையாகச் செயல்படுத்தும் வழிவகை செய்யப்படவில்லை.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 75,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, எல்லா விவசாயிகளையும் சென்றடைய போதுமானதல்ல.  சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளைச் சென்றடையத் தேவை ரூ.87,000 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொகை போதுமானதல்ல.

பாரதிய கிசான் யூனியன் பேச்சாளர் தர்மேந்திர மாலிக் இதுபற்றிக் குறிப்பிடுகையில், நாட்டின் வளர்ச்சி பற்றியே நிதியமைச்சர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையே என்று கவலை தெரிவிக்கிறார்.

நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி பற்றிய அரசின் புள்ளி விவரத்தையே ஏற்கத்தக்கதுதானா என்பதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் கூறியது, இது ஒருபுறமிருக்க, மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்ட நிதி ஒதுக்கீடு சென்ற ஆண்டு திருத்தப்பட்ட 61,084 கோடி கோடி ரூபாயும் கூட, 60,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் நிதியமைச்சராகவிருந்து தயாரித்த நிதிநிலை அறிக்கையில், பெண்களுக்கான ஒதுக்கீட்டில் 5.1 விழுக்காட்டிலிருந்து 4.9 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வரி விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்

எளிய - நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலையைச் சூறையாடும் பெட்ரோல்,  டீசல் விலை கூடுதல் கட்டண விதிப்பு, வாகனங்கள் போக்குவரத்தைக் காட்டி விலைவாசி உயரக்கூடும்.

மொத்தத்தில் பெருத்த அறிவிப்புகள் மட்டுமே, வருவாய் ஆதாரங்கள் வழிமுறைகள் பற்றி தெளிவாக்கப்படாத நிலை இருக்கிறது.
இது ஒரு கானல் நீர் வேட்டையாக இல்லாமல், உண்மையான நீர் - போதிய மழையின்மையால் நாட்டில் கிடைப்பதுபோல - பலன்கள் எளியவர்களைச் சேருமா என்பது கேள்விக்குறி.

கார்ப்பரேட்டுகளும், தனியார்த் துறையும் பெரிதும் அகமகிழ்ந்து கொண்டாடுவதிலிருந்து - இது எப்படி, யாருக்குப் பயன்படக்கூடியது என்பது எளிதில் புரியும்.

பொன்முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்ப்பதா?

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது - அதுவும் நல்ல லாபம் தரக்கூடியதை விற்பது - பொன்முட்டை இடும் வாத்தினைக் கொன்று முட்டை தேடுவது போன்றதேயாகும்!

தற்போதுள்ள ஏழை, எளியவர்களின் அன்றாட வாழ்வினை ஒளிமயமாக்கும் இந்த பட்ஜெட் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக உள்ளது.

குறைந்த அரசு - நிறைந்த ஆளுமை என்று கூறப்பட்டதற்கு மாறாக, பலவிதத்திலும் அரசின் அதிகார ஆளுமையே படமெடுத்தாடுவது பட்ஜெட்டில் 'பளிச்சென' தெரிகிறது.

வெளிநாட்டு முதலீடு இறையாண்மைக்குச் சவாலே!

வெளிநாட்டு முதலீடுகளுக்கு 100-க்கு 100 அகலமாக வசதியாக சலுகையுடன் கதவுகளைத் திறந்திருப்பதன்மூலம், நாட்டின் பொருளாதாரமும், இறையாண்மையுமே கேள்விக்குறியாகிவிடும் பேராபத்து உள்ளடக்கமாக அமைந்துள்ளது வேதனைக்குரியது", என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in