பாவலர் இரா.கு. அரங்கசாமி மறைவு: கோலார் தங்கவயலில் உடல் அடக்கம்

பாவலர் இரா.கு. அரங்கசாமி மறைவு: கோலார் தங்கவயலில் உடல் அடக்கம்
Updated on
1 min read

தமிழ் செயல்பாட்டாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான பாவலர் இரா.கு. அரங்கசாமி உடல் நலக்குறைவால் நேற்று கோலார் தங்கவயலில் காலமானார்.

அவருக்கு வயது 94. கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள மாரி குப்பத்தை சேர்ந்தவர் இரா.கு. அரங்கசாமி (94). பாரத தங்க சுரங்கத்தில் பணியாற்றிய காலத்தில் இடதுசாரி தொழிற்சங்கத்தில் இணைந்தார்.

இடதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், தொழிலாளர் உரிமைகளுக்கான‌ தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தார்.  இதனால்  தங்க சுரங்க நிர்வாகத்தின் கண்டிப்பான நடவடிக்கைக்கும், சிறை தண்டனைக்கும் ஆளானார். 

தங்கவயல் இடதுசாரி இயக்க தலைவர்கள் கே.எஸ்.வாசன், கோவிந்தன் ஆகியோருடன் நெருக்கமாக பழகிய இவர், தமிழ் அமைப்புகளிலும் ஆர்வமுடன் செயல்பட்டார். 

தொழிலாளர் பிரச்சினை, சாதி கொடுமை, மூடநம்பிக்கை சிக்கல் போன்ற  சமூக அவலங்களை சாடி, பல்வேறு இதழ்களில் கவிதை எழுதினார். தங்கவயல் தமிழ்ச் சங்க கவியரங்க‌ம், ஐடிஐ தமிழ் மன்ற பாவாணர் பாட்டரங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் ஏரிக்கரை கவியரங்கம் உள்ளிட்டவற்றில் பங்கேற்று கவிதை பாடியுள்ளார்.

ஐடிஐ தமிழ் மன்றத்தில் பொற்கிழி பாவலர் விருதையும் பெற்றுள்ளார். கர்நாடக தமிழ்மொழி சிறுபான்மையினர் நலப்பேரவையின் பொதுச்செயலாளராக இருந்த இவர், தமிழர் உரிமை சார்ந்த போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றார். 90 வயதை கடந்த பிறகும் தமிழ்வழி கல்வி, தமிழ் வழிபாட்டு உரிமை சார்ந்த செயல்பாடுகளில் தீவிரமாக கலந்துகொண்டார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். மாரிகுப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பாவலர் இரா.கு. அரங்கசாமியின் உடலுக்கு இடதுசாரி அமைப்பினரும், தமிழ் அமைப்பினரும் அஞ்சலில் செலுத்தினர்.

தங்கவயல் தமிழ்ச்சங்க தலைவர் கலையரசன், தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்க செயலாளர் துரை ராஜேந்திரன், உலக தமிழ்க் கழக தலைவர் கி.சி.தென்னவன், இலூஷன் நூலக உரிமையாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் ரோட்ஜெர்ஸ் கேம்ப் கல்லறையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. மூத்த தமிழ் செயல்பாட்டாளர் பாவலர் இரா.கு. அரங்கசாமியின் மறைவு கர்நாடக தமிழ் அமைப்பினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in