

மரணப் போராட்டத்தின்போது தன் உயிரைப் பொருட்படுத்தாது, 65 பயணிகளைக் காப்பாற்றி உயிர் துறந்தார் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர். வருவாய் ஈட்டிய ஒரே நபரை இழந்து வாடும் அவரது குடும்பத்தின் வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அக்குடும்பத்துக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தேரியிலிருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்து கடந்த 3-ம் தேதி காலை வந்துகொண்டிருந்தது. பேருந்தை, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (52) ஓட்டி வந்தார். தமிழக எல்லையைக் கடந்து நெலாக்கோட்டை அருகேயுள்ள கூவசோலை என்ற பகுதிக்கு வந்துபோது, அப்துல் ரகுமானுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
வலியால் துடித்துக்கொண்டிருந்தவரை கண்டு பயணிகள் சப்தமிட்டனர். கடும் வலியிலும்கூட, பேருந்து தனது கட்டுப்பாட்டிலிருந்து சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அப்துல் ரகுமான், சாலையோரத்தில் உள்ள தடுப்பு மீது மோதி நிறுத்தியுள்ளார். பேருந்து நின்றதும், மாரடைப்பால் அப்துல் ரகுமானின் உயிர் பிரிந்தது.
பேருந்தில் இருந்த பயணிகள், அப்துல் ரகுமானை உடனடியாக நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டதை மருத்துவ ஊழியர்கள் உறுதி செய்தனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சோகத்தில் உறைந்தனர்.
இறந்த ஓட்டுநரின் உடல் சுல்தான்பத்தேரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மரணப் போராட்டத்திலும் பேருந்தில் பயணித்த 65 பயணிகளைக் காப்பாற்றினார் அப்துல் ரகுமான்.
அதிர்ச்சி அடைந்த நடத்துநர்
அந்த பேருந்தின் நடத்துநரான, கேரள போக்குவரத்து கழகம் பத்தேரி பிரிவில் பணியாற்றும் எம்.கே. ரவீந்திரனை தொடர்பு கொண்டபோது சக ஊழியரின் மரணத்தால் ஆழ்ந்த சோகத்தில் இருந்தார்.
அவரிடம் பேசியபோது, ‘கேரள போக்குவரத்துக் கழகத்தின் பத்தேரி கிளையில் கடந்த 15 ஆண்டுகளாக அப்துல் ரகுமான் பணியாற்றி வந்தார். அன்றைய தினம் காலை 9 மணிக்கு பேருந்தை அவர் ஓட்டி வந்தார். காலை நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் நிரம்பியிருந்தது. மொத்தம் 65 பயணிகளுடன் பேருந்து புறப்பட்டது. தமிழக எல்லையைக் கடந்து நெலாக்கோட்டை அருகே கூவசோலை என்ற பகுதிக்கு வந்துபோது, திடீரென பயணிகள் அலறல் சப்தம் கேட்டது. பின்னால் இருந்த நான் முன்னே சென்று பார்த்தபோது அப்துல் ரகுமான் தனது இருக்கையில் சரிந்திருந்தார்.
பேருந்து நின்று பின்னர் மீண்டும் முன்னே சென்றது, உடனே நான் ஹேண்ட் பிரேக்கை பிடித்து இழுத்தேன், ஆனால் பேருந்து நிற்காமல் சென்றது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு சாலையோரத்தில் ஒரு திட்டில் மோதி பேருந்து நின்றது. அப்துல்ரகுமானை நெலாக் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றோம். அங்கு அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. பேருந்து சாலை யின் மறுபுறத்துக்குச் சென்றி ருந்தால், அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்’ என்றார்.
இறந்த ஓட்டுநர் அப்துல் ரகுமானுக்கு ரம்லா என்ற மனைவியும், ஷமீரா, ஷஹீர், ஷாதில் மற்றும் ஷஹானா என இரு மகள்கள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
மூத்தவரான ஷமீராவுக்கு திருமணமாகி, அவரது கணவர் அபுதாபியில் பணிபுரிந்து வருவதால் இவரும் தனது குடும்பத்தாருடன் கேரள மாநிலம் கோழிகோட்டில் உள்ள கொடுவள்ளி, கிழக்கோட்டு கச்சேரி முக்கில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். அப்துல் ரகுமானின் குடும்பத்தாரை ‘தி இந்து’ தொடர்பு கொண்டபோது அவரது மூத்த மகள் ஷமீரா பேசினார். தந்தையை இழந்த சோகம் அவரது குரலில் நிழலாடியது. தன்னை தேற்றிக்கொண்டு அவர் கூறியதாவது:
எனது தந்தையின் மரணம் எதிர்பாராதது. எங்கள் நால்வரில் எனக்கு மட்டுமே திருமணமாகி உள்ளது. ஷஹீர் தற்போது பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஷாதில் பிளஸ் டூவும், ஷஹானா பிளஸ் 1-ம் படிக்கின்றனர். எங்கள் குடும்பத்தில் ஒரே வருவாய் ஈட்டும் நபர் தந்தை அப்துல் ரகுமான்தான். அவர் இறந்து விட்டதால் குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கருணை அடிப்படையில் வாரிசு வேலை கிடைக்கும். எனது தம்பி பட்டப்படிப்பு படித்து வருவதால் வாரிசு வேலைக்கு அவனை அனுப்புவதா அல்லது அம்மா செல்வதா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
“அப்துல் ரகுமானுக்கு, பி.எப். உள்ளிட்ட பணப் பயன்கள் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை ஆகியன வழங்கப்படும். அதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக” கேரள போக்குவரத்துக் கழக பத்தேரி கிளை அதிகாரிகள் தெரிவித்தனர்.