பார்வைத் திறன் குறைந்த மாணவர் எம்பிபிஎஸ் படிக்க தமிழக அரசு அனுமதி மறுப்பு: சீட்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பார்வைத் திறன் குறைந்த மாணவர் எம்பிபிஎஸ் படிக்க தமிழக அரசு அனுமதி மறுப்பு: சீட்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

90% பார்வையிழந்த மாற்றுத் திறனாளிக்கு எம்பிபிஎஸ் சீட் வழங்க மாட்டோம் என உச்ச நீதிமன்றம்வரை தமிழக அரசு சென்றும், அவருக்கு சீட்டு வழங்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

தென்காசி மேலகரத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கு 75 சதவீத கண் பார்வைத் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அகில இந்திய அளவில் 285-வது இடம் பெற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர சீட் கிடைத்தது.

ஆனால், மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டுக் குழு முன்பு ஆஜராகி சான்றிதழ் பெற்று சமர்பிக்குமாறு விபினுக்கு கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டுக் குழு விபினைப் பரிசோதித்து அவர் 90 சதவீதப் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர் என சான்றிதழ் வழங்கியது.

இதனால் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி 40 சதவீதத்துக்கு மேல் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவ சீட் வழங்க முடியாது என்று கூறி விபினுக்கு எம்பிபிஎஸ் சீட் மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றக் கிளையில் விபின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, விபினுக்கு மருத்துவ சீட் மறுப்பது மாற்றுத்திறனாளிகள் சட்டத்துக்கு எதிரானது. எனவே மனுதாரருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்க வேண்டும். அந்த சீட் நிரப்பப்பட்டிருந்தால் வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சுகாதாரத் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யபட்டது.

இந்நிலையில் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி விபின் தரப்பில்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேநேரம், தமிழக அரசு தரப்பில் விபினுக்கு மருத்துவ சீட் வழங்கிய  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா , எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விபினுக்கு மருத்துவ சீட்  கொடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டதோடு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும், மாணவர் விபினுக்கு இந்திய மருததுவக் கவுன்சில் எந்த இடையூறும் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in