Last Updated : 05 Jul, 2019 05:44 PM

 

Published : 05 Jul 2019 05:44 PM
Last Updated : 05 Jul 2019 05:44 PM

இ அடங்கல் திட்டத்தில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் தெரியாமல் விவசாயிகள் தடுமாற்றம்

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் தெரியாத விவசாயிகளுக்கு இ அடங்கல் திட்டம் தடுமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பயிர் பதிவுகளில் பல்வேறு குளறுபடிகளும் ஏற்படுகிறது.

விவசாயிகள் கடன், உரம், மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர்களின் அடங்கல் நகல் அவசியம். எனவே அவர்கள் விளைவித்துள்ள பயிர் உள்ளிட்ட விபரங்கள் விஏஓ.கையெழுத்துடன் அளிக்கப்படும். இதற்கென கிராம நிர்வாக அலுவலகங்களில் தனி பதிவேடுகள் பராமரிக்கப்படும்.

இவற்றை முறையாக பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட விளைநிலங்களில் ஒவ்வொரு மாதமும் 25ம் தேதிக்குள் பயிர்களை பார்வையிட்டு வருவது வழக்கம்.

இந்த நகல் தேவைப்படும் விவசாயிகள் விஏஓ.அலுவலகத்தைநேரடியாக தொடர்பு கொண்டு இவற்றைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில் இவற்றை இணையம் மூலம் பெற்றுக் கொள்ளும் வகையில் இஅடங்கல் எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக இ அடங்கல் எனும் செயலியை விவசாயிகள் தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் தாங்கள் விளைவித்துள்ள பயிர் விபரங்களை தாங்களாகவே பதிவு செய்யலாம்.

இத்தகவலை விளைநிலங்களுக்குச் சென்று கிராம நிர்வாக அலுவலர் உறுதிப்படுத்துவார். பின்பு வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என்று ஒவ்வொரு நிலையிலும் ஒப்புதல் பெறப்பட்டு பின்பு அடங்கல் ஆவணம் நிறைவு பெறும்.

இவற்றை விவசாயிகள் இசேவை மையம் மூலமே பெற்றுக் கொள்ளலாம். அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளாமலே தங்களுக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இத்திட்டம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக தனியார் நிறுவனம் மூலம் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் இதில் பல்வேறு நடைமுறைச்சிக்கல் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறுகையில், அடங்கல் தேவை என்றால் சம்பந்தப்பட்ட விஏஓ.அலுவலகம் சென்றால் 10 நிமிடத்தில் எழுதி கொடுத்துவிடுவர்.

விவசாயிகள் பலருக்கும் ஆண்ட்ராய்டு பயன்பாடு தெரிவதில்லை.

எனவே தாலுகா அலுவலகங்களில் உள்ள இசேவை மையங்களைத் தேடிச் செல்ல வேண்டியதுள்ளது. விண்ணப்பங்களை ஒருங்கிணைந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வயலை பார்வையிட்டு ஒப்புதல் அளிக்க ஒரு மாதமாகிவிடுகிறது. அதற்குள் விவசாயத்திற்குத் தேவையான உரம், நாற்று உள்ளிட்ட மானியங்களை பெற முடியவில்லை என்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், எங்களுடன் முடிய வேண்டிய பணி தற்போது உயர் அதிகாரிகள் வரை செல்கிறது. இதனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகி தாமதம் ஏற்படவே வாய்ப்புள்ளது. பல்வேறு ந டைமுறைச் சிக்கல் இதில் உள்ளது என்றனர்.

வேளாண்துறையினர் கூறுகையில், புதியதாக ஒரு தொழில்நுட்பம் வருகையில் விவசாயிகளுக்கு தடுமாற்றம் ஏற்படுவது இயல்புதான். பழகிவிட்டால் அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமலே ஆவணங்களை பெற முடியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x