Published : 01 Jul 2019 11:57 AM
Last Updated : 01 Jul 2019 11:57 AM

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து கடந்த 2013-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), வி.மைத்ரேயன்(அதிமுக), டி.ரத்தினவேல்(அதிமுக), கே.ஆர்.அர்ஜுனன்(அதிமுக), ஆர்.லட்சுமணன்(அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிகிறது.

இதையடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி வரும் 18-ம் தேதி புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேரை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க உள்ளது. இன்று (திங்கள்கிழமை) அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. தமிழகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்பட்டு தேர்தல் நடைமுறை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், 88 எம்எல்ஏக்களுடன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 97 எம்எல்ஏ எண்ணிக்கையைக் கொண்டிருந்த, திமுக கடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதன் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்தது.

தற்போது உள்ள நிலையில் திமுகவுக்கு உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் 3 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்யும் தகுதி உள்ளது.

அதன்படி ஏற்கெனவே திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்குவதாக அறிவித்த அடிப்படையில் மீதமுள்ள இரண்டு இடங்களில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.

திமுக இளைஞர் அணி பொதுச் செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மாநிலங்களவை உறுப்பினராக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. மறுபுறம் போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம், திமுக வழக்கறிஞர் அணி தலைவர் வில்சன் ஆகியோருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று திமுக தலைமை தமது கட்சி சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளரும் மூத்த நிர்வாகியுமான சண்முகம் மற்றும் திமுக வழக்கறிஞர் அணி தலைவர் வில்சன் ஆகியோர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அன்பைப் பெற்ற தலைவராவார். கடந்த 2016 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் சண்முகத்திற்கு வாய்ப்பு வழங்க  திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்திருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பின்னர் தற்போது  சண்முகம் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதேபோன்று மற்றொரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுகவின் வழக்கறிஞர் அணி தலைவரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் திமுக சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வெற்றியை வாங்கித் தந்தவர்.

ஒரு வழக்கில் வெற்றி பெற்ற வில்சனை பாராட்டிய திமுக தலைவர் கருணாநிதி, இவர் வில்சன் அல்ல 'வின்'சன் என்று தனக்கே உரிய பாணியில் பாராட்டினார். திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் அவரது உடலை புதைக்க தமிழக அரசிடம் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களை கூறி தமிழக அரசு காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்ய அனுமதி அளித்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டது. கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அதே நேரத்தில், வில்சன் உயர் நீதிமன்றத்தில் அவரது அடக்கம் குறித்த வழக்கில் வாதாடி கொண்டிருந்தார். அவரது அடுக்கடுக்கான வாதத்தின் முடிவில் உயர் நீதிமன்றம் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்தது.

மிக நெகிழ்ச்சியான இந்த சம்பவத்தில் வழக்கில் வலுவான வாதங்களை வைத்து வெற்றிபெற வில்சன் காரணமாக இருந்தார். இதன்மூலம் திமுகவின் வரலாற்றில் வில்சன் பெயர் இடம் பெற்றவிட்டது.

திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது வேட்பாளராக ஏற்கெனவே மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடலாம் என தெரிகிறது.

போதிய அளவு எம்எல்ஏக்கள் உள்ளதால் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு என்பது தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படாமல் உறுப்பினர்கள் எண்ணிக்கை காரணமாக போட்டியின்றி அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

அதிமுக சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் பட்டியலும்  இன்று அறிவிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x