Published : 08 Jul 2019 01:00 PM
Last Updated : 08 Jul 2019 01:00 PM

மாற்று வேட்பாளர்: இது எங்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம்; வைகோ விளக்கம்

முன்னெச்சரிக்கையாகத் தான் மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் வைகோவுக்கு மாற்று வேட்பாளராக திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ இன்று (திங்கட்கிழமை) காலை மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திமுக தலைவர் ஸ்டாலின் என்னை தொடர்புகொண்டு, மாநிலங்களவைக்கு நீங்கள் செல்வதாக இருந்தால்தான் மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு மதிமுகவுக்கு வழங்கப்படும் என கூறினார்.

அதையடுத்து, மதிமுக நிர்வாகிகள் அனைவரும் நான் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என ஒட்டுமொத்தமாக விரும்பியதன் பேரில், அதனை நான் ஏற்றுக்கொண்டேன். மாநிலங்களவைக்கு நான் போட்டியிடுவதாக இருந்தால் தான் ஒரு இடம், இல்லையென்றால் பேச்சுவார்த்தை வேறு விதமாக செல்வதற்கு வாய்ப்பு இருந்தது. இது எழுதப்படாத ஒரு ஒப்பந்தம். தேர்தல் ஒப்பந்தத்தில் இதனை நாங்கள் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், என் மீதான தேசத்துரோக வழக்கில் பிரிவு 124 ஏ-ன் கீழ் எனக்கு தண்டனை கிடைத்துள்ளது. இந்த வழக்கில் எனக்கு தண்டனை வராது என நான் நம்பியது உண்மை. காரணம், சுதந்திரத்துக்கு முன்புதான் காந்தியும், பாலகங்காதர திலகரும் இந்த பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டனர். பாலகங்காதர திலகர் சிறையில் இருந்தபோது, நேரு உட்பட அனைவரும், பிடிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில் இந்தியா இருந்தபோது இருந்த இந்த கொடுமையான பிரிவை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகும் கூட இந்த பிரிவு நீக்கப்பட வேண்டும் என நேரு வலியுறுத்தினார். ஆனால், நீக்கப்படவில்லை.

ஆனால், இன்றுவரை இந்தியாவில் இந்த சட்டப்பிரிவின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் விடுதலையாகினர். ஆனால், எனக்கு ஓராண்டு கால தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவிலேயே பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தேன். இப்போது சுதந்திர இந்தியாவில் இப்பிரிவின் கீழ் தண்டனை பெறும் நபராகவும் நான் இருக்கிறேன்.

காந்தியின் உருவபொம்மையை சுட்டுக் கொன்றவர்களும் நாதுராம் கோட்சேவுக்கு சிலை எழுப்ப வேண்டும் என சொல்பவர்களும் தேச பக்தர்களாக இருக்கின்றனர்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (1)-ன் கீழ், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் போதைப்பொருள் மற்றும் பெண்களுக்கு கேடு விளைவிக்கும் சட்டப் பிரிவுகளின்கீழ், மத பிரச்சினைகள் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டாலோ, அபராதம் மட்டும் விதிக்கப்பட்டாலோ கூட அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

மக்கள் பிரதிநித்துவச் சட்டம் பிரிவு 8 (2)-ன்கீழ் உள்ள சட்டப்பிரிவுகளில் தண்டிக்கப்பட்டாலும் அவர்கள் போட்டியிட முடியாது. சில வழக்குகளில் அபராதம் இருந்தாலே போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநித்துவ சட்டம் 8 (3)-ன் படி, எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் இரண்டாண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டிக்கப்பட்டல் போட்டியிட முடியாது.

அதனால், என் வேட்பு மனு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இருந்தபோதிலும், ஏற்கெனவே எங்களுக்குள் செய்துகொள்ளப்பட்ட எழுதப்படாத ஒப்பந்தத்தின்படி, இத்தீர்ப்பு வருவதற்கு முன்பே ஸ்டாலினை நேரில் சந்தித்து நான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், ஒரு மாற்று ஏற்பாட்டை நீங்கள் செய்துகொள்ளுங்கள் என்று நான் தான் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன்.

முன்னெச்சரிக்கையாக என்.ஆர்.இளங்கோவனை திமுக வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளது. நாளை மனு பரிசீலனை உள்ளது. என் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், என்.ஆர்.இளங்கோவனின் மனு வாபஸ் பெறப்படும் என தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதுகுறித்து மதிமுக தொண்டர்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுப்வட வேண்டாம்" என வைகோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x