Published : 08 Jul 2019 04:18 PM
Last Updated : 08 Jul 2019 04:18 PM

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தேர்தல் வழக்கு

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி பாஜக தலைவர் தமிழிசை வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 38 தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  பலமுனைப் போட்டியில் திமுக 37 இடங்களில் வென்றது.

அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் வென்றார். இந்தத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜககோவை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

5 தொகுதிகளில் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகிய நட்சத்திர வேட்பாளர்கள் பாஜக சார்பில் போட்டியிட்டனர். இதில் திமுக நட்சத்திர வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை போட்டியிட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப்பின் நடந்த தேர்தல் என்பதால் திமுக வெற்றி பெற வாய்ப்பு அதிகம் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு தனது பிரச்சாரத்தில் கடுமையான நெருக்கடியை தமிழிசை கொடுத்தார்.

ஆனாலும், மக்களவைத் தேர்தல் முடிவில் 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வியைத் தழுவியது. தூத்துக்குடியில் கனிமொழியிடம் தமிழிசை தோற்றுப்போனார். இந்நிலையில் தேர்தல் வெற்றியை எதிர்த்து 45 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாத்தூர் அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் பாஜக வேட்பாளர் தமிழிசை தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து தமிழிசையின் வழக்கறிஞர் சௌந்தரராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.

''தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என தேர்தல் வழக்கை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை தாக்கல் செய்துள்ளார். முக்கியமாக 2 விஷயங்களுக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1. வேட்புமனு தாக்கலில் ஏராளமான தவறான தகவல்கள் உள்ளன. 2. தேர்தல் விதிமீறல்கள் அதிகம் நடந்தன. இந்த இரண்டு காரணங்களுக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது”.

இவ்வாறு தமிழிசையின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அவரது மனு விசாரணைக்கு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x