Published : 04 Jul 2019 06:18 PM
Last Updated : 04 Jul 2019 06:18 PM

உதயநிதி திடீரென்று வந்துவிடவில்லை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உதயநிதி திமுகவுக்கு திடீரென்று வந்துவிடவில்லை. என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

திமுகவின் முக்கியப் பதவிகளில் ஒன்றான இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலின் இருந்த அப்பதவி, தற்போது உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதயநிதியின் நெருங்கிய நண்பரும் திருவெறும்பூர் எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.

 

அப்போது அவர் கூறும்போது, ''மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. நான்கு தலைமுறைகளாக இரண்டு குடும்பத்துக்கும் நட்பு இருக்கிறது. இளைஞர்களின் மேம்பாட்டுக்காக உதயநிதி கடுமையாக உழைப்பார்.

 

ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் கலந்துகொண்டவர்தான் உதயநிதி. அவர் திடீரென்று வந்துவிடவில்லை. ஸ்டாலினின் மகன் என்பதால் வாரிசு விமர்சனங்கள் எழத்தான் செய்யும். ஆனால், தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அவர் அதை மாற்றிக்காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

தேர்தல் பிரச்சாரங்களின்போது மக்களிடத்தில் உதயநிதிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. உதயநிதிக்கு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. ஆனால் அவர் இந்தப் பதவியை விரும்பவில்லை.  இளைஞரணிப் பதவி வேண்டும் என்று உதயநிதி எதிர்பார்க்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்குத் தன்னுடைய பங்கு இருக்கவேண்டும் என்றுதான் அவர் ஆசைப்பட்டார். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஒட்டுமொத்தமாக அந்தக் கருத்தை வலியுறுத்தினர். தீர்மானமாகவே அதை முன்மொழிந்தனர். அதனால்தான் உதயநிதிக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

 

தலைவர் ஸ்டாலினை அனைவரும் நெருக்கியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சிக்கு நல்லது என்று வரும்போதுதான், இதைச் செய்ய முன்வந்தோம். மக்களால் ஏற்றக்கொள்ளப்பட்ட இளைஞராகதான் உதயநிதியை பார்க்கிறோம்'' என்றார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x