

திருவாரூர் அருகே தேவர்கண்ட நல்லூரில் மது விற்பனைக்கு எதிராக விளம்பரப் பதாகை வைத்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இளைஞரை, நீதிபதி தனது சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளார்.
தேவர்கண்டநல்லூரில் கிராம இளைஞர்கள் சிலர் மது விற்பனைக்கு எதிராக சில விளம்பரப் பதாகைகளை வைத்தனர். அதில் 'தமிழ்நாடா, குடிகார நாடா?' என்ற தலைப்பில் ஒரு பதாகை இருந்தது. இதுதொடர்பாக காவல்துறை, செல்லபாண்டி என்ற இளைஞர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. அதன்பேரில் செல்லபாண்டியை கொறடாச்சேரி காவல்துறையினர் கைது செய்தனர்.
செல்லபாண்டியை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது, ''சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர்களுக்கு எதிராக விளம்பரப் பதாகை வைத்தது தவறா?'' என்று நீதிபதி காவல்துறையிடம், கேள்வி எழுப்பினார்.
''எந்தவித முகாந்திரமும் இல்லாமல், செல்லபாண்டியனைக் கைது செய்தது ஏன்?'' என்றும் காவல்துறைக்குக் கண்டனங்களைத் தெரிவித்தார். இதையடுத்து தனது சொந்த ஜாமீனில் செல்லபாண்டியை விடுதலை செய்தார்