

உதயநிதி இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டுவார் என தான் நம்புவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "திமுகவில் இளைஞர் அணி என்ற புதிய அமைப்பை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கினார். அந்த அணியைக் கட்டமைக்கும் பணியை, ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு, தமிழகம் முழுமையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வலுவுள்ள அமைப்பாக வார்ப்பித்தார்.
கடுமையான உழைப்பாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாலும், ஸ்டாலின் கட்டி எழுப்பிய இளைஞர் அணி, இன்று, திமுகவின் வலிய படைக்கருவிகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்.
அந்த அணியின் புதிய செயலாளராக, உதயநிதி ஸ்டாலினை நியமித்து, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவித்து இருப்பதை, மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.
உதயநிதி ஸ்டாலின், கலையுலகில் தமது திறமையை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் மனங்களில் ஒரு இடத்தைப் பெற்று இருக்கின்றார். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகம் முழுமையும் அவர் மேற்கொண்ட பிரச்சார சுற்றுப்பயணம், மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகின்ற உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டுவார் என நம்புகிறேன். அவருக்கு என் பாராட்டுகளையும், நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்", என வைகோ தெரிவித்துள்ளார்.