Published : 12 Jul 2019 03:45 PM
Last Updated : 12 Jul 2019 03:45 PM

குடும்பத்தோடு வந்து அத்திவரதரைத் தரிசித்த குடியரசுத் தலைவர்

காஞ்சிபுரத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்தோடு அத்திவரதரைத் தரிசித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு பிறகு அவர் எழுந்தருளி இருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்தையும் தாண்டி பக்தர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் அத்திவரதரைத் தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் மாலை 3 மணிக்குக் காஞ்சிபுரம் வந்தடைந்தார். சென்னைக்கு விமானத்தில் வந்த அவரை முதல்வரும் துணை முதல்வரும் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்தடைந்தார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் இறக்கப்பட்ட நிலையில், அவர் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசனம் செய்தார். முன்னதாக காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவரை மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா வரவேற்றார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஜித் மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் காஞ்சிபுரம் வந்தனர். குடியரசுத் தலைவரின் வருவகையையொட்டி பொது தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியுடன் நிறுத்தப்பட்டது. மீண்டும் 5 மணி முதல் பக்தர்கள் அத்திவரதரை வழக்கம்போல் தரிசிக்க முடியும்.

பாதுகாப்பு பணியில் போலீஸார்

குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி அதிவிரைவுப் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் உள்ளூர் போலீஸார் 4 ஆயிரம் பேர்  பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x