Published : 17 Nov 2014 08:47 AM
Last Updated : 17 Nov 2014 08:47 AM

மாயமானதாக கூறப்படும் பெண் புலி உட்பட 26 புலிகளும் பாதுகாப்பாக பூங்காவில் உள்ளன: வண்டலூர் பூங்கா இயக்குநர் பேட்டி

மாயமானதாகக் கூறப்படும் வங்கத்து பெண் புலி, வண்டலூர் பூங்காவுக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில்தான் உள்ளது. அதன் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. யாரும் பீதியடைய வேண்டாம் என்று பூங்கா இயக்குநர் உறுதிபடக் கூறியுள்ளார்.

சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. யானை, சிங்கம், புலி உட்பட ஏராளமான விலங்குகள், பறவைகள், பாம்புகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. புலிகள் வாழும் பகுதி 6 ஏக்கரில் பள்ளத்தாக்கு போல அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றி அகழியும் அதைச் சுற்றி 8 அடி உயரத்துக்கு கருங்கல் சுவர் கட்டப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு முன்பு புலிகள் வாழ்விடப் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் சுமார் 85 அடி நீளத்துக்கு சேதமாகி விழுந்துவிட்டது. இதை பூங்கா ஊழியர்கள் உடனே கவனித்து, அவசரமாக வலை, இரும்பு வேலிகள் அமைத்தனர். சுவர் விழுந்த சந்தர்ப்பத்தில், அங்கிருந்த புலிகளில் நேத்ரா என்ற வங்கத்து பெண் புலி மட்டும் மாயமாகிவிட்டதாக தகவல் பரவியது. அது காட்டுப் பகுதியில் வெளியேறிவிட்டதாகவும், அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் எந்த நேரத்திலும் நுழையலாம் என்றும் பெருங்களத்தூர், நெடுங்குன்றம், ஓட்டேரி, ஊனமாஞ்சேரி பகுதி மக்கள் மத்தியில் வதந்தி பரவியது.

இந்நிலையில், பூங்கா வளாகத்தில் இருந்து புலிகள் எதுவும் மாயமாகவில்லை என்று வண்டலூர் பூங்கா இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’விடம் அவர் கூறும்போது, ‘‘வழக்கம்போல, புலிகளுக்கு இறைச்சி உணவு வைக்கப்படுகிறது. அனைத்து புலிகளும் வழக்கம்போல வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்கின்றன. பள்ளத்தாக்கில் நடமாடும் புலிகளை மக்கள் தினமும் பார்த்துச் செல்கின்றனர். புலிகள் மாயமானதாக வதந்தி பரவிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்தம் 15 ஆயிரம் பேர் வந்து பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர். புலிகள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 5 வங்கத்து புலிகளும் பூங்கா எல்லைக்குள் அதற்குரிய பகுதியில் நடமாடுவதை கேமரா மூலம் உறுதிசெய்துள்ளோம். பூங்காவில் 14 வெள்ளைப் புலிகள், 12 வங்கத்து புலிகள் என மொத்தம் 26 புலிகள் உள்ளன. அவை அனைத்தும் பூங்காவுக்குள்தான் உள்ளன. யாரும் அச்சமடையத் தேவையில்லை’’ என்றார்.

அதிகாரிகள் மேலும் கூறும்போது, ‘‘புலி எங்கள் கட்டுப்பாட்டை விட்டுச் சென்றிருந்தால், மக்கள் அனுமதி நிறுத்தப்பட்டு பூங்காவை மூடியிருப் போம். தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும். பூங்காவை விட்டு புலி எங்கும் செல்லவில்லை என்பதால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. வழக்கம்போல பூங்கா செயல்படுகிறது. பார்வையாளர்கள் வருகின்றனர். வண்டலூர் காட்டுப் பகுதியில் விமானப் படையினர், போலீஸ் அகாடமியினர் பயிற்சி செய்கின்றனர். புலி எங்கள் கட்டுப்பாட்டை மீறி மாயமாகிவிட்டது என்ற வதந்தியை நம்ப வேண்டாம். பீதி கிளப்பவும் வேண்டாம்’’ என்றனர்.

புலி மாயம் என்பது வதந்திதான் என உறுதிசெய்யும் விதமாக, தமிழக அமைச்சர்கள், பத்திரிகையாளர் களுக்கு புலிகளின் வாழிடப்பகுதி இன்று காண்பிக்கப்படுகிறது. வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் வண்டலூர் பூங்காவில் புலிகள் வாழும் பகுதியை இன்று காலை 10.30 மணிக்கு நேரில் பார்வையிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x