Published : 06 Jul 2019 09:50 PM
Last Updated : 06 Jul 2019 09:50 PM

திருப்பதியில் முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார்? போலீஸ் பிடியில் இருக்கும் வீடியோ வெளியானது

காணாமல்போன சூழலியல் ஆர்வலர் முகிலன் ஆந்திரா மாநிலம் திருப்பதி  அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.போலீஸ் பிடியில் முகிலன் அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முகிலன்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம்’ என்று கூறி, அதுதொடர்பான ஆதாரங் களை வெளியிட்டார்.

இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மறுநாள் எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயிலில் சென்ற அவர், இரவு 10.30 மணிக்கு நண்பர் களுடன் போனில் பேசினார், அதன்பின் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

அவர் காணாமல் போய் 150 நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அவரை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரும் மனுமீது உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு விசாரணை நடந்து வந்தது.

வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி சில ஆதாரங்களை சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் அளித்தது. அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் காணாமல் போன முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது பள்ளித்தோழர் சண்முகம் சிபிசிஐடி போலீஸாரிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முகிலன் குடும்பத்தை அறிந்தவர், முகிலன் படிக்கும் போது அதே கல்லூரியில் படித்தவர் சண்முகம். அவர் இன்று தொழில் நிமித்தமாக ஜோலார்பேட்டையில் இருந்து ராஜமுந்திரி சென்று கொண்டிருந்துள்ளார். இரவு சுமார் 7 மணியளவில் திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில் நின்றுள்ளது.

அப்போது சண்முகம், சாமி கும்பிடுவதற்காக பிளாட்பாரத்தில் இறங்கி உள்ளார்.  அப்போது முகிலனை மூன்று காவலர்கள் பிடித்து அழைத்துச் சென்றதை பார்த்ததாகவும், அவர்கள் நடுவே அவர் முழக்கமிட்டு சென்றதை பார்த்துள்ளார்.

தமிழகத்தில் சிபிசிஐடி போலீஸார் தேடி வருவதால் உடனடியாக அவர் இதுகுறித்து சென்னைக்கு தகவல் சொன்னதாகவும், இதையடுத்து அவரது தகவலை வைத்து சென்னை சிபிசிஐடி போலீஸார் ஆந்திர போலீஸாரிடம் பேசி வருகின்றனர்.

இதனிடையே திருப்பதியில் போலீஸ் பிடியில் தாடி மீசையுடன் முகிலன் கோஷமிட்டப்படி செல்லும் காணொலி வெளியாகி உள்ளது. ஆகவே பிடிபட்டது முகிலன் தான் என்பது நிரூபணமாகியுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x