

வேறொரு நபருடன் ஏற்பட்ட திடீர் நட்பு காரணமாக கணவரை விட்டு விலகி விவகாரத்து செய்த மனைவி விரும்பியவருடன் வாழச்சென்று விட்டதால் மனமுடைந்த கணவர் மகளுடன் சேர்ந்து விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை திருமங்கலம், தோப்பூர் அருகே தந்தையும் 9 வயது மகளும் நேற்றிரவு குளிர்பானம் வாங்கி அதில் விஷத்தைக் கலந்து பருகிவிட்டு வயல்வெளியில் தற்கொலை செய்துகொண்டனர். இரவு இருட்டில் யாருக்கும் தெரியவில்லை.
காலையில் உயிரிழந்த நிலையில் இருவரும் சடலமாக கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர் பையில் இருந்த ஓட்டுநர் உரிமத்தை வைத்துப் பார்த்ததில் அவர், கோவை மேட்டுப்பாளையம் தாலுகா சிக்கதாசன் பாளையம் சேரன் நகரைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிருபாகரன் எனத் தெரியவந்தது.
மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. மேட்டுப்பாளையம் சிக்கடாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் கிங்க்ஸ்டன் கிருபாகரன் (41). இவரது மனைவி செவிலியர். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து 9 வயதில் ஜூலியா என்கிற பெண் குழந்தை உள்ளது.
நல்லபடியாகச் சென்ற திருமண வாழ்வில் கிருபாகரனின் மனைவிக்கு வேறொரு நட்பு கிடைத்தது. இதைப்பற்றி அறிந்த அவர் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் நான் அவருடன்தான் வாழப்போகிறேன் என கணவரிடம் விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டார்.
மகள் தன்னிடமே இருக்க தந்தை விரும்ப, மகள் தாயுடன் வாழவேண்டும் என விரும்ப மீண்டும் மனைவியிடம் சென்று தன்னுடன் வந்து சேர்ந்து வாழும்படி கிருபாகரன் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
விரும்புவதும் வெறுப்பதும் அவரவர் சொந்த விருப்பம் என்றாலும் மகள் தினமும் தாயை நினைத்து உருகுவதை கிருபாகரனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள கிருபாகரன் முடிவெடுத்தார்.
சொந்த ஊரில் தற்கொலை வேண்டாம் என தந்தையும் மகளும் கோவையிலிருந்து மதுரைக்குக் கிளம்பி வந்தனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் தந்தையும் மகளும் தற்கொலை செய்துகொண்டனர். மேற்கண்ட விவரங்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்கொலைக்கு முன் அவர் தனது பையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், “என்னால் எவ்வளவு காலம்தான் தாக்குப்பிடிக்க முடியும். நான் சோர்ந்து போய்விட்டேன். என் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டேன், ஜூலியும் என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல் என்னுடனே வருவதாகக் கூறியதால் என்னுடனே அழைத்துச் செல்கிறேன்” என எழுதி வைத்துள்ளார்.