Published : 11 Jul 2019 04:29 PM
Last Updated : 11 Jul 2019 04:29 PM

ரூ.900 கோடி சிலை கடத்தல் வழக்கு- அமெரிக்க சிறையை நோக்கி சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தீனதயாளன்: கைது செய்து ஆஜர்படுத்த நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு

ரூ.900 கோடி மதிப்புள்ள சிலைகள் மற்றும் தொன்மையான கலைப்பொருட்களை கடத்தி, விற்பனை செய்த வழக்கில், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தீனதயாளன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொன்மை வாய்ந்த சிலைகள், கலைப்பொருட்கள் கோவில்களிலிருந்து கொள்ளை அடிக்கப்பட்டு உலகம் முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சிலைகள், கலைப்பொருட்களுக்கு வெளிநாடுகளில் ஏக மதிப்பு.

இதைப்பயன்படுத்தி கிராம கோவில்களில், பழமையான கோவில்களில் உள்ள சிலைகளை, கலைப்பொருட்களை குறிவைத்து கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்துவந்தது பெரிய கும்பல் ஒன்று.

இவர்கள் கலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைக்கடத்தல் வேலைகளை செய்து வந்தனர். இந்த கும்பலில் பிரதானமானவர் தீனதயாளன். இவருக்கு தமிழ் நாட்டிலுள்ள பழமையான தொன்மையான சிலைகள் அத்துப்படி.

இவருடைய கூட்டாளிகள் ஒருவர் சுபாஷ் கபூர், சிலைக்கடத்தல் மன்னன் என அழைக்கப்பட்ட சுபாஷ் கபூர் நூற்றுக்கணக்கான சிலைகளை கடத்தி பலமுறை கைதான நபர். இவர்கள் இருவர் தவிர வேறு பலரும் சிலைகடத்தல் தொழிலில் உள்ளனர்.

சுபாஷ் கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் உள்ள சுபாஷ் கபூர் வெளியே வரவில்லை.சுபாஷ் கபூர், தினதயாளன் உள்ளிட்ட அவர்களது கூட்டாளிகள் இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் உள்ள தொன்மையான சிலைகளை கடத்தி விற்பனை செய்துவருவதால் சரவதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு பல நாடுகளில் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்வதேச அளவில் ரூ.900 கோடி மதிப்புள்ள 2 ஆயிரத்து 900 சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு நியூயார்க் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 இந்த வழக்கில், சுபாஷ் கபூர் பிரதான குற்றவாளி, கபூரின் கூட்டாளிகள் தீனதயாளன், சஞ்சீவி அசோகன், ரஞ்சித் கன்வர், ஆதித்ய பிரகாஷ், ரிச்சர்டுசாலமன், வல்லபபிரகாஷ், நெயில், பெர்ரி ஸ்மித் ஆகியோரும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் மேற்கண்ட அனைவரையும் கைது செய்து ஆஜர்படுத்த நியூயார்க் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களில் சஞ்சீவி, அசோகன், தீனதயாளன், சுபாஷ்கபூர் உள்ளிட்டோர் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்த வழக்கில் கைது செய்து நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அந்நாட்டு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x