

மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதித்த தடையாணை செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் இருந்து வந்தது.
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன, அவர்கள் மனுவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், அரசாணை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என வாதிடப்பட்டது. போதிய அவகாசம் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையையும், மத்திய ரசாயன துறையையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து இரு துறைகளும் பிப்ரவரி 4ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் சுற்றுச்சுழல், வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பதிலளித்தனர். அவர்கள் பதில் மனுவில், பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை, நாடுமுழுதும், 16 மாநிலங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கில் போதுமான அனைத்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, மாற்று தொழில் செய்யும் அனைத்து வசதிகளும் அமைத்து தரப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தனர்.
இதை ஏற்று வழக்கை தேதிக்குறிப்பிடாமல் நீதிபதிகள் சுப்பைய்யா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சுப்பைய்யா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு தீர்ப்பளித்தது. பிளாஸ்டிக் தடை அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற நிறுவனங்களின் வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டுமுதல் தமிழக அரசு அமல்படுத்தியுள்ள அரசாணை செல்லும், தடை செய்யப்பட்ட 14 நெகிழி பொருட்களை பயன்படுத்தக்கூடாது, நெகிழி பொருட்கள் தயாரிக்கும் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. நெகிழி தடை தங்களுக்கு பொருந்தாது என non-wooven plastic நிறுவனங்கள் தொடர்ந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.