Published : 13 Jul 2019 10:30 AM
Last Updated : 13 Jul 2019 10:30 AM

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை மாற்றியமைக்கக் கோரி உண்ணாவிரதம்: அமைச்சரின் மவுனத்தால் விவசாயிகள் அதிருப்தி

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொடிவேரி தடுப்பணை யில் இருந்து, பெருந்துறை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில், ரூ.250 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்கு கொடிவேரி பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு, கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு, தற்போது கொடிவேரி அணையின் உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம் தான் சிறந்தது என பரிந்துரைத்தது. இதனை கொடிவேரி பாசன விவசாயிகள் ஏற்காத நிலையில், திட்டப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று (13-ம் தேதி) கோபி பெரியார் திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. பெரியார் திடலில் உண்ணாவிரதம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், கோபி சீதா கல்யாண மண்டப வாயிலில் இடம் மாற்றப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு

அதே நேரத்தில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தற்போதைய திட்டப்படி, செயல்படுத்தும் போது, 500 ஆண்டுகளாக பாசன வசதி பெறும் தடப்பள்ளி பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், திட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாசனசபை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசுத் துறைகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், 16-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மவுனம்

இதுகுறித்து ஆளுங்கட்சி பிரமுகர்கள் கூறும்போது, கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக இரு தொகுதி மக்களும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கோபி தொகுதி எம்.எல்.ஏ.வும், மூத்த அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் அமைதி காப்பது அதிர்ச்சியளிக்கிறது. சட்டப்பேரவை நடக்கும் நிலையில், தனது தொகுதி விவசாயிகள், அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் நிலைக்கு சென்ற பிறகும், அமைச்சர் அமைதி காப்பது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது, என்றனர். பெருந்துறை எம்.எல்.ஏ. தரப் பில் பேசியபோது, ‘மாவட்ட நிர்வா கம் நியமித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின்படி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். திட்டப்பணிகள் 80 சதவீதம் முடிந்தபின்பு, வேண்டுமென்றே திட்டத்திற்கு தடை போடப்பார்க்கின்றனர்’ என்றனர்.

தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனசபைத் தலைவர் சுபி.தளபதியிடம் பேசியபோது, கொடிவேரி குடிநீர் திட்டம் தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான செங்கோட்டையன், அமைச்சர் கருப்பணன், அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார், என்றார். சட்டப்பேரவையில் திங்கள் கிழமை பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பான பிரச்சினையும் பேசப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x