Published : 09 Jul 2019 05:25 PM
Last Updated : 09 Jul 2019 05:25 PM

வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாதது எதனால்? - தினகரன் விளக்கம்

வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது எதனால் என்பது குறித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "மக்களவைத் தேர்தலில் அமமுக சந்தித்த பின்னடைவுக்கான காரணங்களை உணர்ந்து, எதிர்காலத்தில் அவற்றையும் எதிர்கொண்டு வெற்றிகளைக் குவிக்கும் தாகத்தோடு காத்திருக்கும் உங்களின் எழுச்சிக்கு முதலில் தலை வணங்குகிறேன்.

தேர்தல் முடிவுக்குப் பிறகான முதல் கடிதம் என்பதால், சில விவரங்களை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, அதிமுகவை காட்டிக்கொடுத்து, டெல்லிக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கத் துணிந்த துரோகிகளிடம் இருந்து அதிமுகவை மீட்கும் பயணத்தில் நாம் சந்தித்த சவால்கள், தடைகள், துரோகங்கள் எத்தனை எத்தனையோ. அந்த சதிகளுக்கு மத்தியில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி என்ற சரித்திர சாதனையைப் படைத்தோம்.

இந்த வெற்றியால் எரிச்சலுற்ற நம் எதிரிகள் நம்மை வீழ்த்துவதற்கான சதி வேலைகளை இருமடங்காகச் செய்ய ஆரம்பித்த நேரத்தில்தான் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவை இடைத் தேர்தல்களும் வந்தது. நீதிமன்ற அனுமதியோடு தனி இயக்கம் கண்டு நாம் இயங்கிவந்தபோதும், நமக்கென ஒரு தனி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததை எதிர்த்து மிக நீண்ட சட்டப் போராட்டத்தை நாம் நடத்தினோம்.

இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் இயக்கமும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்திருக்காது என்று சொல்லும் அளவுக்கு கடும் சோதனைகளை, சதிகளை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. வேட்புமனு தாக்கலுக்கு சில மணி நேரம் முன்புவரை நாம் யார்..? அரசியல் கட்சியின் வேட்பாளரா? சுயேச்சை வேட்பாளரா என்பதைக்கூட உறுதிபடச் சொல்ல முடியாத ஒரு சோதனையை வேறு எந்த இயக்கமும் சந்தித்திருக்காது.

கடைசியில், சுயேச்சைகளாகத்தான் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டு, அதன்பிறகும் சில நாள் காத்திருப்புக்குப் பிறகு பரிசுப் பெட்டகம் சின்னத்தைப் பெற்றோம். உங்களது அயராத உழைப்பின் காரணமாக இரண்டே வார கால இடைவெளியில் அந்தச் சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.

ஆனாலும், நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. நமது கழகத் தோழர்கள் ஈடுபாட்டோடு பணிபுரிந்தும், வாக்குப்பதிவு முடியும்வரை விழிப்போடு கண்காணித்து தங்கள் வாக்கையும் பதிவிட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத்களில் நமது இயக்கத்திற்கு பூஜ்ஜியம் வாக்குகளே கிடைத்த, மர்மமும் சந்தேகமும் கலந்த விசித்திரம் ஒருபுறம்... எதிரிகளும் துரோகிகளும் இணைந்து கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பை புகுத்தி மக்கள் மனங்களில் நமது இயக்கத்தின் பலம் பற்றி விதைத்த தவறான கருத்து மறுபுறம்... என பல விஷயங்கள் நமது வெற்றி பறிப்போகக் காரணமாக இருந்தாலும், இன்னொரு முக்கிய காரணமும் மறுக்க முடியாத உண்மையாக நமது கழகத் தோழர்களே சுட்டிக்காட்டியதை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

நமது சின்னமாக இருந்த பரிசுபெட்டகத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தாலும், நாம் சுயேச்சைகள் என்பதால் மிகப் பெரும்பாலான தொகுதிகளில் நமது சின்னம், இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குப்பதிவு இயந்திரங்களில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. நமக்கு வாக்களிக்க விரும்பியும் நமது சின்னத்தைத் தேடுவதில் கிராமப்புற மக்கள் பட்ட சிரமங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இத்தகைய சட்ட ரீதியான, நடைமுறை ரீதியான சங்கடங்கள், தடைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாகத்தான் அமமுக என்னும் நமது இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியை வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களிலேயே நாம் ஆரம்பித்தோம்.

இந்த நேரத்தில்தான், ஏற்கெனவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவை பொதுத் தேர்தலில் நாம் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்த நேரத்தில், ஆட்சி அதிகாரத்தைக் காட்டி மிரட்டி, பதவி ஆசை காட்டி ஆளும் கட்சியும், நமது இயக்கத்தை பலவீனப்படுத்திவிடலாம் என்ற நப்பாசையுடன் எதிர்க்கட்சியும் சேர்ந்து நம்மில் சிலரை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும், நமது இயக்கத்திற்கு நிஜமான மக்கள் ஆதரவு இருக்கிறது... எதிர்காலத்திலும் வலுவான இயக்கமாக, மக்கள் நலன் காக்கும் வகையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ள இயக்கமாக இருக்கப்போகிறது என்ற யதார்த்த உண்மையை புரிந்துகொண்டு, ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்த கூட்டத்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற தாகத்தோடு, லட்சோப லட்சம் தொண்டர்கள், அம்மாவின் உண்மையான விசுவாசிகள் என்ற அடையாளத்தோடு இந்த இயக்கத்தில் துடிப்போடு தொடர்ந்து பணியாற்றிவரும் நீங்கள், வேலூர் தேர்தல் களத்தையும் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், நமது இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணி ஆகஸ்ட் மாத இறுதிவாக்கில் நிறைவுபெறக்கூடும். அதுவரை நாம் சுயேட்சை என்ற அடையாளத்தோடுதான் தேர்தல் களத்தில் அறியப்படுவோம். அந்த அடிப்படையில் இந்த வேலூர் தொகுதி தேர்தலுக்காக ஒரு சின்னத்தைப் பெற்று, தொடர்ந்து வரவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு தனித்தனிச் சின்னங்களைப் பெற்று நாம் தேர்தலை சந்திப்பதும்; நமது இயக்கத்தை பதிவு செய்யும் பணி நிறைந்து நமக்கென ஒரு நிரந்தர சின்னத்தைப் பெற்று அதன்பிறகு வரும் தேர்தல்களைச் சந்திப்பதும் என பல சின்னங்களில் போட்டியிடுவது மக்களிடம் மட்டுமல்ல... நமது தொண்டர்கள் மத்தியிலும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த யதார்த்த சூழலை மனதில்கொண்டு, நமது இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம். நீங்களும் அதை உணர்ந்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 'இந்த முடிவு பயத்தின் காரணமாக எடுக்கப்பட்டது... தேர்தல் களத்தைக் கண்டு அமமுக பயப்படுகிறது...' என்றெல்லாம் நமது எதிரிகள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்யக்கூடும். அவற்றையெல்லாம் புறந்தள்ளுங்கள்.

நமது கழகத்தை அதிகாரபூர்வமாக பதிவு செய்து, நமக்கென ஒரு நிரந்தர சின்னம் பெறும் பணிகளை கழகம் முன்னெடுக்கும் அதே நேரத்தில், நமது கழகத்தை வலுப்படுத்தும் வகையில் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நமது இயக்கத்துக்கான நிரந்தரமான புதிய அடையாளத்தோடு மக்களைச் சந்திப்போம்... வெற்றிகளை ஈட்டுவோம்... தமிழகத்தை இந்த துரோகக் கூட்டத்திடம் இருந்து மீட்போம்", என தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x