ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை: வேல்முருகன் கண்டனம்

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை: வேல்முருகன் கண்டனம்
Updated on
1 min read

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை எனும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஏற்கெனவே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே தேர்தல், ஒரே கல்வி என்று சொல்லி வரும் பிரதமர் மோடி, இப்போது ஒரே குடும்ப அட்டை என்றும் சொல்கிறார்.

ஏன் இந்த ஒரே... ஒரே...? எல்லா வகையிலும் ஏற்றத் தாழ்வு நிலவும் இந்த சமூகம், மாறாமல் அப்படியே தொடர வேண்டும் என்ற சிந்தனை தான்; மாநிலங்களை வெறும் நிர்வாக அலகுகளாக மாற்றி, மத்தியிலேயே அதிகாரம் அனைத்தையும் குவித்துக்கொள்ளும் பாசிச உத்திதான்.

2016 நவம்பரில் வந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்தான் நாடு முழுவதும் இந்த ஒரே குடும்ப அட்டை திட்டத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லும் மோடி அரசு, மாநிலங்கள் இதை ஓராண்டுக்குள் அமல்படுத்த வேண்டும் எனக் கெடு விதித்திருக்கிறது.

இந்தக் குடும்ப அட்டைக்கு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லும் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், இதுதான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான முதன்மை நோக்கம் என்கிறார்.

அப்படியானால், தமிழகத்திற்கு நாள்தோறும் படையெடுக்கும் வடமாநிலத்தவர்களைக் கணக்கில் கொண்டே இத்திட்டம் என்பது தெளிவு.
வட மாநிலத்தவர் வருகையை கட்டுப்படுத்த; இங்குள்ள மத்திய, மாநில வேலைவாய்ப்புகளை பிற மாநிலத்தவர்களுக்கல்லாமல் தமிழர்களுக்கே முறையே 95 மற்றும் 100 விழுக்காடு அளிக்க; சட்டம் இயற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்தி போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

ஆனால் அதற்கு நேர் மாறாக வடமாநிலத்தவரைத் தமிழகத்தில் குவிக்கவும், அவர்களுக்கு குடும்ப அட்டை உள்பட அனைத்து வசதிகளை ஏற்படுத்தவும் வகை செய்கிறது மோடி அரசு.

இதற்கு தமிழக அரசு இணங்கிவிடக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக அரசை எச்சரிக்கை செய்கிறது. மாநில உரிமையைப் பறித்து, கூட்டாட்சி முறையினை அழித்து, ஜனநாயகத்தையே குழி தோண்டிப் புதைக்கும் மோடியின் ஒரே... ஒரே... பிதற்றல்கள், இன்றைய ஸ்டீஃபன் ஹாக்கிங் காலத்தை கற்காலத்திற்குப் பின்தள்ளுவதே?", என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in