

சட்டப்பேரவை தொகுதிகளின் அடிப்படையில் விசிகவில் 234 மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நியமித்துள்ளார்.
நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் உள்கட்டமைப்புகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் விசிக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் நாடாளுமன்ற தொகுதிகளின் அடிப்படையில் 39 மண்டல செயலாளர்களை திருமாவளவன் அறிவித்தார். மேலும் அடுத்தக்கட்டமாக மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாவட்டக் கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் வருவாய் மாவட்டங்கள் 38 இருந்தபோதும், கட்சிகள் அவர்களின் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்களாகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்துள்ளனர். விசிகவில் இதுவரை, 144 பேர் மாவட்டச் செயலாளர்களாகப் பதவி வகித்தனர். இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒருவர் மற்றும் கூடுதலாக மாநகர, ஒன்றிய, வட்ட அளவில் என மொத்தமாக 144 பேர் மாவட்டச் செயலாளர்களாக இருந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் சட்டப்பேரவை தொகுதிகளின் அடிப்படையில் 234 மாவட்ட செயலாளர்களை விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு சி.சவுந்தர், ராயபுரம் தொகுதிக்கு சிவ பேரறிவாளன், பெரம்பூர் நா.உஷாராணி, திருவிக நகர் புரசை அன்பழகன் உட்பட தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.