Last Updated : 08 Jul, 2019 01:36 PM

 

Published : 08 Jul 2019 01:36 PM
Last Updated : 08 Jul 2019 01:36 PM

ஊழியர்கள் மோசமாக நடத்தியதால் தேனி மருத்துவக்கல்லூரி வார்டைவிட்டு வெளியேறிய ஆதரவற்ற முதியவர்: திறந்தவெளியில் கிடந்த பரிதாபம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆதரவற்ற முதியவர் ஒருவர் ஊழியர்களால் மோசமாக நடத்தப்பட்டார்.

நோயினால் அவதிப்பட்ட இவர், மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதால் வார்டைவிட்டு வெளியேறி திறந்தவெளியில் சென்று படுத்துக் கொண்டார். விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே நரசிங்கபுரத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. 2005-ல் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 900 உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி, 170-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 280-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

இங்கு பொதுநலம், தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை, குழந்தைகள் நலம், மகப்பேறு, எலும்புமுறிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளும், ரத்தவங்கி, ஸ்கேன்சென்டர், எம்ஆர்ஐ.ஸ்கேன், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன.

தேனி மாவட்டம் மட்டுமல்லாது திண்டுக்கல், மதுரை, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்ற முதியவர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.

உறவுகள் ஆதரவில்லாத நிலையில் இவர் தனிமையிலே சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இவரை மருத்துவ ஊழியர்கள் சரிவர கவனித்துக்கொள்ளாமலும், கடும் வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாத இவர் மருத்துவ ஊழியர்களுக்குப் பயந்து வார்டிற்கு வெளியே அவசர சிகிச்சை அறைக்கு பின் பகுதியில் சிரமப்பட்டு வந்து படுத்துக் கொண்டார்.

இங்கேயே 3 நாட்கள் திறந்தவெளியில் கிடந்துள்ளார். பாம்பு கடித்த இடத்தில் புண் செப்டிக்  ஆகி ஆறாமல் இருக்கிறது. மேலும் இவரைச் சுற்றிலும் கொசு, ஈக்கள் மொய்த்தபடி இருப்பதால் இவரை பார்க்கும் பலரும் பரிதாபமடைந்து இவர் குறித்த தகவலை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இது குறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், இங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே புண்ணுக்கு ஊசி, மருந்து போடுகின்றனர். தனிமையிலும், ஏழ்மையிலும் சிகிச்சை பெற வருபவர்களை திட்டி சிகிச்சை முடியும் முன்பே வெளியில் அனுப்புவது அடிக்கடி நடக்கிறது.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மருத்துவமனை-நோயாளிகள் உறவுமுறையை மேம்படுத்தவும், பாகுபாடற்ற சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கவும் கண்காணிப்புக்குழு ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக இலவசத் தொடர்பு எண்களையும் காட்சிப்படுத்த வேண்டும் என்றனர்.

இந்நிலையில் இந்த முதியவர் குறித்த தகவல்கள் ஊடகங்களில் பரவியதால் மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் இவரை வார்டிற்குள் அழைத்து வந்துள்ளது.

இருப்பினும் இவரிடம் கடுமையாக நடந்து கொண்ட ஊழியர்கள் யார்? எதனால் அப்படி நடந்து கொண்டார்கள்? என்று விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வறுமை நோயாளிகளை கீழ்த்தரமாக நடத்தும் நிலையில் மாற்றம் ஏற்படும் என்று இங்குள்ள பிற நோயாளிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x