Published : 09 Jul 2019 12:49 PM
Last Updated : 09 Jul 2019 12:49 PM

பிறந்த நாள் பரிசுப் பொருள் வழக்கு; ஜெயலலிதா மரணம் அடைந்ததால் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி: செங்கோட்டையன் விடுவிப்பு

கடந்த 1992-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் அவரது பிறந்த நாளுக்காக பரிசுப் பொருட்களும், காசோலைகள், டி.டி.கள் வந்துள்ளன. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் ஆகும்.

மேலும் முதல்வராக இருப்பவர் தனக்கு வரும் பரிசுப் பொருட்களை அரசின் கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், பரிசுத் தொகையை தனது வங்கிக் கணக்கில் ஜெயலலலிதா டெபாசிட் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்தத் தொகைக்கு வருமான வரி கட்டவில்லை எனவும் கூறப்பட்டது.

இதனையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு, செங்கோட்டையன் ஆகியோர் மீது  சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2011-ம் ஆண்டு சிபிஐ மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக  கடந்த 2012-ம் ஆண்டு சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனு விசாரணை நிலுவையில் இருந்தபோது, ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மரணமடைந்தனர். இதனையடுத்து கடந்த 2017-ல் ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை கைவிடப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால் சிபிஐ தரப்பில் அந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் செங்கோட்டையன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி  பானுமதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இது 23 ஆண்டு பழைய வழக்கு. இது அதிக கால தாமதம். வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் இறந்துவிட்டனர் என நீதிபதி தெரிவித்தார்.

சிபிஐ தரப்பில், காலதாமதம் ஏற்பட்டதற்குக் காரணம் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் மீது வழக்கு பதியக்கூடாது எனக்கூறி நீதிமன்றத்தை நாடி வழக்கை இழுத்தடித்தனர்.

மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில், இருவர் இறந்தாலும் ஒருவர் உயிரோடு இருக்கிறார். அவருக்கு எதிராக வழக்கை நடத்தலாம் என வாதிட்டனர்.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  இந்த வழக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது. 1996-ல் எப்.ஐ.ஆர் பதியப்பட்டது. பின்பு 2006-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனவே  விசாரணையில் தாமதம் உள்ளது என்பதைக் காண முடிகிறது.

மேலும், உயர் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் எப்.ஐ.ஆர் காலதாமதமாக பதியப்பட்டது, விசாரணை தாமதிக்கப்பட்டது என்பதையும் கூறி  சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ மனுவை தள்ளுபடி செய்தது.

தற்போது இதில் தொடர்புடைய ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்துவிட்டனர். அவர்களுக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.

மேலும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை, எனவே இந்தக் காலதாமதத்தை எதிர் மனுதாரர்களுக்கு சாதகமாக கொடுத்து வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவால் அமைச்சர் செங்கோட்டையனும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x