

சேலம் அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நேற்று 80 வயது முதியவர் ஒரு மணி நேரம் குடிநீர் கேட்டு தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆறு நீர்த்தேக்கத் தொட்டிகள், இரண்டு கிணறுகள் உள்ளன. இதன் மூலம் இங்குள்ள பல்வேறு மருத்துவப் பிரிவுகள் இயங்கும் கட்டிடங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அரசு மருத்துவமனைக்கு வெளி நோயாளிகள் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், அரசு மருத்துவமனைக்கு தினமும் வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பலரும் தண்ணீரின்றித் தவித்து வருகின்றனர். நோயாளிகளின் உறவினர்கள் வெளியில் உள்ள கேன்டீனில் ரூ.20 பணம் கொடுத்து, தண்ணீர் வாங்கி குடித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில், கடந்த ஒரு வாரமாக 80 வயது மதிக்கத்தக்க முதியவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உறவினர்கள் யார் என்று தெரியாத நிலையில், அவர் மட்டும் தனியாக உள்நோயாளியாக இருந்து வருகிறார்.
நேற்று (புதன்கிழமை) காலை திடீரென முதியவர் படுக்கையில் இருந்து கீழே விழுந்தவர், தண்ணீர் கேட்டு ஒரு மணிநேரமாக சத்தமிட்டபடி இருந்துள்ளார். மூன்றாவது தளத்தில் தண்ணீர் வராத நிலையில், அருகில் இருந்தவர்களாலும் உடனடியாக முதியவருக்குத் தண்ணீர் கொடுக்க முடியவில்லை. வெகுநேரம் கழித்து அருகில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் முதியவருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்துள்ளனர்.
முதியவர் அடிக்கடி படுக்கையில் இருந்து கீழே விழுந்து விடுவதும், அவரது ஆடை கலைந்து இருப்பதும், அருகில் இருப்பவர்கள் அவருக்கு ஆடையைச் சரி செய்து விடுவதும் என்று இருந்து வந்துள்ளனர். அவருக்கு அருகில் இருப்பவர்கள் சாப்பிடும் உணவை அவ்வப்போது அளித்து வருகின்றனர்.
மூன்றாவது மாடிக்கு குடிநீர் வராத நிலையிலும், கீழே சென்று குடிநீர் பிடித்து வர நோயாளிகள் மற்றும் உதவிக்கு உடன் தங்கியுள்ள முதியவர்கள் சிரமம் காரணமாக தண்ணீரின்றியே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். முதியவர் தண்ணீரின்றித் தவித்த தகவல் அறிந்த மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக செவிலியர்களை அனுப்பி, அவருக்கு தேவையான முதலுதவிகளையும், தண்ணீரையும் அளித்தனர். மேலும், கீழே படுத்து இருந்த முதியவரை படுக்கையில் அமர்த்தி, அவருக்கு முகச் சவரம் செய்து, தேவையான உதவிகளைச் செய்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் பத்து கேன்டீன்கள் செயல்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை பயன்பாட்டுக் குடிநீரை ஊழியர்கள் மூலம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டீன் உரிய முறையில் விசாரணை செய்து, குடிநீர் பற்றாக்குறையைச் சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறை இல்லை : டீன் விளக்கம்
இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் திருமால்பாபு கூறியது:
''சேலம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை என்பது இல்லை. இங்கு 32 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இதில் பல ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லை என்பது உண்மை. இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்க ஐந்து நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன.
அவசரப் பயன்பாட்டுக்கான ஒரு நீர் சேமிப்புத் தொட்டியும் உள்ளது. அரசு மருத்துவமனையில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், தினமும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிச் செல்வதால், சில இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் சுத்திகரிப்பு தண்ணீரைப் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளோம்.
ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் ஆங்காங்கே பிரித்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதியவர் தண்ணீரின்றி தவிக்கவில்லை. கடந்த சில வாரங்களாகவே முதியவருக்கு செவிலியர்கள் ஆடை மாற்றி விடுவது முதல் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றனர். அவரின் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், எப்பொழுதும் அவர் அருகில் செவிலியர்கள் இருந்து கவனிப்பது என்பது சிரமம்.
இதுபோல தினமும் ஆதரவற்ற நிலையில் பல நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் நாங்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகளைச் செய்து வருகிறோம்.
இவ்வாறு திருமால்பாபு தெரிவித்தார்.