Published : 11 Jul 2019 06:26 PM
Last Updated : 11 Jul 2019 06:26 PM

இந்துத்துவா படையெடுப்பை முறியடிப்பேன்: வெற்றிச் சான்றிதழை பெற்ற பின் வைகோ பேட்டி

இந்துத்துவா படையெடுப்பை முறியடிப்பேன் என்று எம்.பி.க்கான வெற்றிச் சான்றிதழை பெற்ற பின் வைகோ தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைக்கான காலி இடங்களுக்கு தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், திமுக வழக்கறிஞர் அணி தலைவர் வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய மூவர் திமுக சார்பில் போட்டியிட்டனர். அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக அக்கட்சியின் இளைஞணித் தலைவர் அன்புமணி, அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான அ.முஹம்மத் ஜான், மேட்டூர் நகர அதிமுக செயலாளர் என்.சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

6 காலி இடங்களுக்கு 6 பேர் மட்டுமே போட்டியிட்டதால், சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. இதனால் 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தலைமைச் செயலகத்தில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து 6 பேரும், அதற்கான சான்றிதழ்களை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ''திமுக பிரதிநிதிகளாக சண்முகம், வில்சன் ஆகிய இருவரும் மதிமுக சார்பில் நானும் மாநிலங்களைவைக்குத் தேர்வான சான்றிதழை சட்டப்பேரவைச் செயலாளரிடம் பெற்றுள்ளோம்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாங்கள் பெரியால் திடலுக்குச் சென்றுவிட்டு, அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் செல்கிறோம். அங்கு அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்திவிட்டு, உறுதிமொழி ஏற்போம்.

தமிழகத்தை, தமிழக இனத்தை, தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்துக்கே பேராபத்தாக உருவாகி வருகிற மதச்சார்பின்மையைத் தகர்க்கும் இந்துத்துவா சக்திகளின் படையெடுப்பைத் தகர்த்து முறியடிப்பதற்கும் கூட்டாட்சித் தத்துவத்தை வெற்றி பெறச்செய்வதற்கும் தமிழகத்தின் மீதான ஆக்கிரமிப்புகள், சுற்றுச்சூழலை நாசமாக்குகிற திட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கவும் கிடைக்கின்ற வாய்ப்பை நான் பயன்படுத்துவேன்.

அண்ணாவின் குரல் ஒலித்த அவையில் அண்ணாவின் கொள்கைகளையும் அவரின் லட்சியக் கனவுகளையும் எடுத்துச் சொல்வதற்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வேன்'' என்றார் வைகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x