Published : 29 Jun 2019 06:27 PM
Last Updated : 29 Jun 2019 06:27 PM

உதகை-கேத்தி இடையே மீண்டும் சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

உதகை - கேத்தி இடையே மீண்டும் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உதகைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வார இறுதி நாட்களில் உதகை மற்றும் கேத்தி இடையே இயக்க ஒப்புதல் அளித்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உதகை-கேத்தி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. வாரயிறுதி நாட்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில், பின்னர் உதகை-கேத்தி இடையே தினமும் 3 முறை என விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி இந்த சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் உதகை-கேத்தி இடையே வார இறுதி நாட்களில் மூன்று முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. உதகையில் இருந்து, கேத்திக்கு காலை 9.40, 11.30 மற்றும் மாலை 3 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

146 இருக்கைகள் கொண்ட நான்கு பெட்டிகளில் முதல் வகுப்புக்கு 32 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன .இரண்டாம் வகுப்பில் 114 இருக்கைகள் உள்ளன. முதல் வகுப்புக்கு ரூ.400, இரண்டாம் வகுப்புக்கு ரூ.300 பயணக் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.100 மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

உதகையிலிருந்து காலை சேவை தொடங்கப்பட்டது. உதகையிலிருந்து புறப்பட்ட ரயில் கேத்திக்குச் சென்றடைந்தது. அங்கு ரயில் பயணித்தவர்களுக்கு ஒரு சமோசா, 1 கப் வெஜிடபிள் சூப், ரயில்வே சின்னம் பொறித்த ஒரு தொப்பி, நீலகிரி மலை ரயில் பற்றிய ஒரு சிறு கையேடு ஆகியவை வழங்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகள் கூறும் போது, "இந்த ரயில் பயணம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. கட்டணம் அதிகமாக இருந்தாலும், ரயில் பயணத்தின் அனுபவம் அலாதியானது. இந்த ரயில் சேவை தொடர்ந்து நடத்தப்பட்டால், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும்" என்றனர். இந்த சிறப்பு ரயில் பயணம் ரயில் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

மலை ரயில் அறக்கட்டளை அறங்காவலர் நட்ராஜ் கூறும் போது, "உலக அளவில் பிரசித்தி பெற்றது நீலகிரி மலை ரயில். யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த ரயிலை முறையாக இயக்க வேண்டும். குறிப்பிட்ட அளவிலான இருக்கைகள் மட்டுமே உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ரயிலில் பயணிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

மேலும், தற்போது உதகை முதல் கேத்தி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் கூடுதலாக சுற்றுலாப் பயணிகளுக்கு மலை ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது" என்றார்.

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமான கதை

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமான கதை 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x