

தங்க தமிழ்ச்செல்வன் விலகலைத் தொடர்ந்து தேனி மாவட்ட அமமுக பொறுப்பாளர்களாக மகேந்திரன், முத்துசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமமுக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளரும், தேனி மாவட்டச் செயலாளருமாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
மாவட்ட அளவிலான நிர்வாகி இல்லாததால் கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிர்வாகிகளை தேர்வு செய்யும்படி டிடிவி தினகரன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டச் செயலாளர் மகேந்திரன், மதுரை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கதிர்காமு ஆகியோர் கொண்ட குழு தேனிமாவட்ட தொண்டர்களிடம் ஆலோசனை நடத்தியது.
பின்பு நிர்வாகிகள் நியமனம் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. இவற்றை கட்சித் தலைமையிடம் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக தேனி மாவட்ட பொறுப்பாளர்களாக முத்துசாமி, உசிலம்பட்டி மகேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முத்துசாமி சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தைச் சேர்ந்தவர். ஒன்றிய செயலாளராகப் பொறுப்பில் இருந்தவர். 1980 முதல் கழகத்தில் இருந்து வருகிறார்.
கிளைச்செயலாளர், ஒன்றியச்செயலாளர், ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட விற்பனைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர்.
உசிலம்பட்டி மகேந்திரன் தற்போது மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக உள்ளார். நகராட்சித்தலைவர், முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார்.
புதியதாக மாவட்டச் செயலாளர் நியமிக்கும்வரை இருவரும் இப்பொறுப்பில் தொடர்வார்கள் என்று அமமுக தலைமை அறிவித்துள்ளது.
நிர்வாகிகள் சிலர் கூறுகையில், அனுபவம் உள்ளவர் என்பதால் மகேந்திரனும் இப்பொறுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் விரைவில் முத்துசாமியே மாவட்டச் செயலாளராக தொடர வாய்ப்புள்ளது என்றனர்.