

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை என, கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார்.
2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை) நாகையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மடிக்கணினிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக வலியுறுத்தாது என மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "திமுக தலைவரை பொறுத்தவரை அவர் ஒரு விளையாட்டுப் பிள்ளை. எதை எப்படி செய்ய வேண்டும் என அறியாதவர் ஸ்டாலின். அதனால் தான் அவர் அப்போது சொன்னதை அவரே வாபஸ் வாங்கிவிட்டார்"என தெரிவித்தார்.
அதன்பின்பு, தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.எஸ்.மணியன், "திருவிழா கூட்டத்தில் திசை மாறிப்போன பிள்ளைகள், திசை தெரியும் போது திரும்பி வருவதற்கு வெட்கப்படுகிறவர்கள் அந்த பக்கம் செல்கின்றனர். வெட்கப்படாதவர்கள் எங்களிடம் வந்துகொண்டிருக்கின்றனர்", என தெரிவித்தார்.