

சென்னை பாரிமுனையில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்த இரு தனித்தனி சம்பவங்களில் ஒரே வாரத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். பழைய கட்டிடங்கள் மீதான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தினால் மேலும் உயிர்ப்பலிகள் நிகழ்வதைத் தடுக்கலாம்.
சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள 2 மாடிக் கட்டிடம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் இருவர் பலியானார்கள். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, பாரிமுனை, மலையபெருமாள் தெருவில் பழைய கட்டிடத்தையொட்டி அமைந்திருந்த டிபன் கடையின் கூரை இடிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
இந்த தொடர் விபத்துகள் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாரிமுனை, சவுகார்பேட்டை பகுதிகளில் இதுபோல் ஏராளமான ஆங்கிலேயர் காலத்து குடியிருப்புகள் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளன. அவற்றை இடிக்காவிட்டால் மேலும் உயிர்ப்பலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றார்.
கடந்த 2012-ம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் 50 ஆண்டு பழமைவாய்ந்த கட்டிடம் இடிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்களை மாநகராட்சி கணக்கெடுத்தது. அவற்றின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, அந்த கட்டிடங்களை இடிக்கவோ, பழுதுபார்க்கவோ உத்தரவிடவேண்டுமென மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.
இது குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயத்திடம் கேட்டபோது, “பாரிமுனை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர் ஆகிய பகுதிகளில் ஆபத்தான கட்டிடங்கள் உள்ளன. அதனால் மேலை நாடுகளில் உள்ளதைப் போன்று, ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற திட்டங்கள் தனித்தனியாக வகுக்கப்பட்டு, பழைய கட்டிடங்களை புனரமைத்து, மக்கள் குடியேற வழிவகைசெய்யவேண்டும். அவ்வாறு சீர்படுத்தமுடியாத கட்டிடங்களை, இடிக்க உத்தரவிடலாம்,” என்றார்.
பழைய கட்டிடங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “சென்னை மாநகராட்சியில் உள்ள ஆபத்தான பழைய கட்டிடங்கள் குறித்த விவரங்களை அந்தந்த வார்டு இளநிலை/உதவி பொறியாளர்கள் தந்துள்ளனர். அதனடிப்படையில் கண்டறியப்பட்ட 132 கட்டிடங்களில் 26-க்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், அதில் சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க அந்த கட்டிடங்களைத் தகர்க்க புதிய வழிமுறைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வட்டார, இணை, துணை ஆணையர்களுக்கு விரைவில் அதற்கான கூடுதல் அதிகாரம் அளிக்கப்படவுள்ளது” என்றனர்.