நாளை ஓய்வு பெறுகிறார் கிரிஜா வைத்தியநாதன்: புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம்

நாளை ஓய்வு பெறுகிறார் கிரிஜா வைத்தியநாதன்: புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம்
Updated on
1 min read

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக, நிதித்துறை செயலாளர் கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

2016-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் தலைமைச் செயலாளராக பணியாற்றிய அவர், நாளை (30-ம் தேதி) ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில், புதிய தலைமைச் செயலாளரை நியமிக்கும் பணியில் தமிழக அரசு இறங்கியது. கூடுதல் தலைமைச் செயலாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியல், மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தற்போதைய நிதித்துறை செயலாளராக உள்ள கே.சண்முகம் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகத்தை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கே.சண்முகத்தின் சொந்த மாவட்டம் சேலம். வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றவரான சண்முகம், 1985 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார். அதே ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றார். கூட்டுறவு , உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாலராக பதவி வகித்த சண்முகம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சிக் காலக்கட்டத்தில் கொண்டு வரப்பட்ட வண்ணத் தொலைக்காட்சி, அம்மா உணவகம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி செயலாற்றியவர் சண்முகம். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 ஆண்டுகள் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார் சண்முகம். தமிழக அரசில் தொடர்ந்து  ஒரே பதவியில் இத்தனை ஆண்டுகள் பொறுப்பு வகித்தது கே.சண்முகம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in