Published : 29 Jun 2019 02:45 PM
Last Updated : 29 Jun 2019 02:45 PM

மாமழை போற்றுதும்... - சீனாவில் தமிழ் கல்வெட்டு!

சீனாவில் உள்ள ஒரு கல்வெட்டில், தமிழ் எழுத்துகளில், `மாமழை போற்றுதும்...’  என சேக்கிழாரின் பெரிய புராணச் செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளதாக கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம் தெரிவித்திருந்தார். ஆச்சர்யத்துடன் அவரிடம் பேசினோம்.

“அண்மையில் முகநூல் பதிவொன்றை  சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, நிறைமதி என்னும் தமிழ்ப் பெயருடன் தமிழில் எழுதி வெளியிட்டிருந்தார்.

முழுப் பெயர் ‘நிறைமதி கிகி ஜாங்’  என்றிருந்தது. அப்பதிவில்,  சீனாவில் உள்ள க்வான்ஜவ் (QUANZHOU) என்ற  ஊரில் இருக்கும் ஒரு தமிழ்க் கல்வெட்டின் ஒளிப்படத்தை வெளியிட்டு, அந்த தமிழ்க் கல்வெட்டு கூறும் செய்தி என்ன? என்று கேட்டிருந்தார். அவர், சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில்  தமிழ் படித்து, தற்போது தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் பணியை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சீனாவில் உள்ள தமிழ்க் கல்வெட்டைப் படித்துப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கல்வெட்டுப் படத்தைப் பதிவிறக்கம் செய்து,  படிக்க முற்பட்டேன். சில இடங்களில் எழுத்துகள் தெளிவாகப் புலப்படவில்லை.

“வைய்ய(க்கேள்) மாமழை மன்னுக … விரும்பிய அன்பர் விளங்குக சைய்வர் நன்நெறி கா..  தழைத்தோங்குக தெய்வவெனக்கந சிறக்கவே...” என்று அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கியத் தமிழ் வடிவத்தில்,  மாமழை மன்னுக, சைய்வர் நன்நெறி தழைத்தோங்குக, சிறக்கவே... ஆகிய தொடர்கள் அழகுற அமைந்த காரணத்தால்,  இந்தக் கல்வெட்டு சைவம் போற்றும் இலக்கியப் பகுதி என்பது தெளிவானது. கல்வெட்டுப் படத்தையும், பாடத்தையும் தமிழ் ஆய்வறிஞர் முனைவர் நா.கணேசனுக்கு அனுப்பி விளக்கம் கேட்டதில், கல்வெட்டு குறிக்கும் செய்யுள் குறித்து அவர் விளக்கினார். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் இயற்றிய ஒரு வாழ்த்துச் செய்யுளே அது என்று குறிப்பிட்டு, முழுச் செய்யுளையும் எழுதியிருந்தார்.

“வையம் நீடுக மாமழை மன்னுக, மெய்விரும்பிய அன்பர் விளங்குக, சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக, தெய்வ வெண்திரு நீறுசிறக்கவே”  என்பதே அந்த செய்யுள்.  தென் சீனாவின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள க்வான் ஜவ் (அல்லது சுவான் ஜவ்)  நகரில் கி.பி. 13-ம் நூற்றாண்டில் ஒரு சிவன் கோயில் இருந்துள்ளது.

தற்போது, இக்கோயில் இல்லை. ஆனால், அதன் கட்டுமானப் பகுதியைச் சேர்ந்த கல் சிற்பங்கள் நகரில் ஆங்காங்கே பல இடங்களில் காணப்படுகின்றனவாம். அனைத்தும் கல்லால் ஆன  கட்டுமானத் துண்டுகள். ஒரு சில துண்டுப் பகுதிகள் அங்குள்ள பௌத்தக் கோயிலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த  துண்டுப் பகுதிகளில் ஒன்றில்தான், தமிழறிந்த சீனப் பெண்மணி, தமிழ்க் கல்வெட்டு வரிகளைப் பார்த்து வியந்துள்ளார். 

13-ம் நூற்றாண்டில்,  அந்த நகரில் தமிழர்களின் குடியிருப்பு இருந்துள்ளதாக கருதப்படுகிறது. சீனத்துக்கும், தமிழகத்துக்கும் இடைக்காலம் வரை வணிகத் தொடர்பு இருந்துள்ளதால், இந்நகரில் குடியேறிய தமிழர்கள்,  வணிகக் குழுவைச் சேர்ந்தவராக இருந்திருக்கக் கூடும். அவர்கள் எடுப்பித்த சிவன் கோயில் அழிவுற்ற போதும், தமிழ்க் கல்வெட்டு ஒன்று எஞ்சி நிற்கிறது. மாமழையைப் போற்றும் என்ற பெரிய புராணச் செய்யுளைத் தாங்கி நிற்கும் அந்தக் கல்வெட்டு, பழந் தமிழர்களின் பெருமையைப் பறைச்சாற்றுகிறது என்பதில் ஐயமில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x