

ஐஏஎஸ் அதிகாரியாக மட்டுமே என் வாழ்க்கையில் நின்றுவிட மாட்டேன் என்றும் சமூகக் கடமையாற்ற நிச்சயம் வருவேன் என்றும் சகாயம் தெரிவித்துள்ளார்.
சகாயம் ஐஏஎஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பிரத்யேகப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''27 ஆண்டுகளில் 26 முறை இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன். இதைப் பார்க்கும்போது நான் சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறேன் என்ற மனநிறைவு ஏற்படுகிறது. மதுரை, மேலூரில் கிரானைட் குவாரிகளில் பெருமளவுக்கு முறைகேடு நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கே அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு என்று சொல்லி ஓர் அறிக்கை அனுப்பினேன். அறிக்கை அளித்த மூன்றாவது நாளே நான் மாற்றப்பட்டேன். என்றாலும் என் சமூகத்துக்காகவே செயல்பட்டிருக்கிறேன் என்ற திருப்தி ஏற்பட்டது.
அரசியல் அழுத்தங்கள், நெருக்கடிகள், பணி மாறுதல்கள் இவையனைத்துமே சோர்வை ஏற்படுத்தும் சூழல்தான். ஓர் ஐஏஎஸ் அதிகாரியாக, பொறுப்பும் அதிகாரமே இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டால், சோர்வு வரலாம். இதை நேர்மைக்குக் கிடைத்த பரிசாக எண்ணி, சோர்வை அசாத்தியமாகக் கடந்திருக்கிறேன்.
மிரட்டல்களுக்கு பயக்கவில்லை
கிரானைட் விவகாரத்தின்போது, குவாரியிலேயே துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவோம் என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தன. அதைப் பொருட்டாகக் கருதவில்லை. மிரட்டல்களுக்குப் பெரிய அளவில் பயப்படவில்லை.
கிரானைட் விவகாரத்தில் பெரிய அளவு முறைகேடு என்பதால், அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கும். குவாரிகள் வெட்டப்பட்டது குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறேன். இதுகுறித்து தமிழக அரசும் நீதிமன்றமுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் என்னுடைய கடமையைச் செய்தேன்.
லஞ்சம் வாங்கினால் தண்டிக்க வேண்டும்
என்னைப் பொறுத்தவரை அரசு ஊழியர்கள் நிறைவான சம்பளத்தையே பெறுகிறார்கள். என்றாலும் அவர்கள் லஞ்சம் வாங்கினால் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். தேர்தலில் பணம் கொடுப்பது ஊழலுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தும். இந்த சூழலை அகற்ற வேண்டும்.
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திட்டம் வேட்டி தினம் திட்டம். அந்த சிறப்பு கோ-ஆப்டெக்ஸுக்கே உரியது. ஆனால் தனியார் பெறும் நிறுவனங்கள், தாங்கள் கொண்டுவந்ததாக பெரிய லாபத்தைச் சம்பாதித்தார்கள்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட பணி
நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எவ்வளவு குரல்கள் வலுவாக ஒலித்தாலும் கூட, அதை என்னால் மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியாது. ஏனெனில் நான் ஓர் அரசு ஊழியன். ஐஏஎஸ் அதிகாரி. அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் பணி செய்யவேண்டும்.
தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் எனக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது. இளைஞர்களை வழிகாட்டுவது அவசியம். அதற்காகத்தான் மக்கள் பாதை இயக்கத்தைத் தொடங்கி, சில திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.
சமூகக் கடமையாற்ற வருவேன்
நிச்சயம் ஐஏஎஸ் அதிகாரியாகவே மட்டுமே என் வாழ்க்கையில் நின்றுவிட மாட்டேன். சமூகக் கடமையாற்ற நிச்சயம் வருவேன். அதைத் தேர்தல் அரசியலாக மட்டும் சுருக்கிவிட வேண்டாம்''.
இவ்வாறு தெரிவித்தார் சகாயம்.