சத்துணவு பொருட்களுக்கான மானியம் உயர்த்தப்படுமா? - அரசாணையை எதிர்பார்த்து பணியாளர்கள் காத்திருப்பு 

சத்துணவு பொருட்களுக்கான மானியம் உயர்த்தப்படுமா? - அரசாணையை எதிர்பார்த்து பணியாளர்கள் காத்திருப்பு 
Updated on
1 min read

சத்துணவுப் பொருட்களுக்கான மானியம் உயர்த்தப்படுமா? என்று பணியாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், 51.96 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.

சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு மதிய நேரங்களில் தக்காளி, எலுமிச்சை, சாம்பார் சாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் சத்துணவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு உணவு தயாரிப்பதற்காக, பருப்பு கலந்த சாதத்துக்கு 5-ம் வகுப்பு வரை உள்ள ஒரு மாணவருக்கு ரூ.1.30, 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவருக்கு ரூ.1.40, பருப்பு கலக்காத கலவை சாதங்களுக்கு 5-ம் வகுப்பு வரை உள்ள ஒரு மாணவருக்கு ரூ.1.70, 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவருக்கு ரூ.1.80 என உணவு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்றும், சத்துணவு பொருட்களுக்கான மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் சத்துணவு பணியாளர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தில் தற்போதைய சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு காய்கறி, தாளிதப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றுக்கு உணவு கட்டணம் (மானியம்) உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஆண்டுக்கு ரூ.98 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால், சத்துணவு பொருட்களுக்கான மானியம் எப்போது உயர்த்தி தரப்படும் என்று சத்துணவு பணியாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் கூறியதாவது:

போராட்டம் நடத்த தயார்

சத்துணவு பொருட்களுக்கான மானியம் தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ற அளவில் இல்லை. இதனால், சத்துணவுப் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், எங்களுடைய சக்தியை மீறி சத்துணவு மையத்தை சிறப்பாகவே நடத்தி வருகிறோம். பட்ஜெட்டில் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டவுடன் சத்துணவுப் பொருட்களுக்கான மானியம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இன்றுவரை அரசாணை வெளியிடப்படாதது ஏமாற்றமாக உள்ளது. சத்துணவுப் பொருட்களுக்கான மானியத்தை உயர்த்தி அரசாணை வழங்காததைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in