Published : 29 Jun 2019 10:05 AM
Last Updated : 29 Jun 2019 10:05 AM

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் இந்தியா 10 ஆண்டுகளில் வளர்ந்த நாடாகிவிடும்: சென்னையில் நடந்த விவாதத்தில் நிபுணர்கள் நம்பிக்கை

மத்திய அரசு 2016-ல் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவின் அடிப்படையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தனது முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது. இதையடுத்து, புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த விவாதம் சென்னை எம்ஜிஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில் அக்கல்லூரி முதல்வர் மணிமேகலை யின் வரவேற்புரையுடன் நேற்று நடந்தது. டிஜிட்டல் ஜர்னலிஸ்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் ‘பிரைம் பாயின்ட்’ ஸ்ரீநிவாசன் விவாதத்தை ஒருங்கிணைத்தார். விவாதத்தை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

இந்தியாவில் முதல்முறையாக 1968-ல் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு 2016-ல் புதிய கல்விக் கொள்கைக் கான முதல் வரைவு வெளியிடப்பட்டது. இப்போது அதன் இறுதி வரைவு அரசிடம் வழங்கப் பட்டுவிட்டது. இது கல்விக் கொள்கையை முற்றிலும் மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மாற்றம் என்பது தொடக்கத்தில் கொஞ்சம் வலி யைத் தரும். ஆனால் அதை தவிர்க்க முடியாது என்றார்.

சிறப்பு அழைப்பாளர்கள் பேசியதாவது:

அண்ணா பல்கலையின் நிலவியல் துறைத் தலைவர் ஆர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி: புதிய கல்விக் கொள்கை வரைவில் பகுதி 9 முதல் 14 வரை உயர் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பாடப் பிரிவு களில் அடிப்படை அறிவை வளர்ப்பதற்கு முக்கியத் துவம் தரும் வகையில் இளநிலைப் பட்டப்படிப்பை மாற்றுவதற்கான முனைப்பு தென்படுகிறது. அன்றாட வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்க் கப் பயன்படும் வகையில் கல்வியை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாகிவிடும்.

டைகூன் பிளஸ் அட்வைசர்ஸ் நிறுவனரும், கல்வித் துறை ஆலோசகருமான எம்.சத்ய குமார்: ஆங்கிலேயர் நம் மீது புகுத்திய கல்விமுறை நம்மை கிளார்க்குகளாக உருவாக் கவே பயன்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்துக்குப் பிறகு அப்படிப்பட்ட கல்விக் கொள்கையையே நாமும் பின்பற்றத் தொடங்கினோம். எனவே நமது இப்போதைய கல்விமுறை தொழில்முனைவோரையும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் சிந்தனை யாளர்களையும் உருவாக்கப் பயன்படுவதில்லை. இது இந்தியத் தன்மைவாய்ந்த கல்விமுறை அல்ல. புதிய கல்விக் கொள்கை 2019, இந்தியத் தன்மைவாய்ந்த கல்விமுறையை மீட்பதற்கானது. 2014-ல் பிரதமராகப் பதவியேற்றபோதே மோடி இதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். அதை அமல்படுத்துவதற்கான நாடாளுமன்றப் பெரும்பான்மையும் தற்போது அவருக்கு கிடைத்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் பண்டைய காலத்தைப் போல 21-ம் நூற்றாண்டிலும் இந்தியா உலகத்துக்கே ஆசானாகத் திகழும் நிலை உருவாகப் போகிறது.

அண்ணா பல்கலையின் கணினி அறிவியல், பொறியியல் துறைத் தலைவர் டி.வி.கோபால்: நெருப்பை போன்றது அறிவு. அது வேகமாக பரவும். அருகில் இருக்கும் பொருட்களையும் உடனே ஆட்கொள்ளும். கல்வியைப் பொறுத்தவரை உள்ளூரில் இருக்கும் பிரச்சினைகளில் உடனடி கவனம் செலுத்தி அவற்றை சரிசெய்ய வேண்டும். அருகில் இருக்கும் பிரச்சினைகளைச் சரிசெய்ய, மற்றவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும். அதன் பிறகு அடுத்த கட்டங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு செல்லலாம்.

கல்வியில் உள்ளளூர்த் தன்மை, உலகத் தன்மை இரண்டும் அதிகரிக்கப்பட வேண்டும். 484 பக்கங்கள் கொண்ட கல்விக் கொள்கை வரைவு சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்காக கஸ்தூரிரங்கனையும், அவரது குழுவினரையும் பாராட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து விவாதத்துக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கைப் பற்றிய கேள்வி - பதில் நிகழ்வும் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x