விஜயதரணி மீது ஏன் நடவடிக்கை  இல்லை; எனக்கு மட்டும் நெருக்கடியா?: கராத்தே தியாகராஜன் கடும் விமர்சனம்

விஜயதரணி மீது ஏன் நடவடிக்கை இல்லை; எனக்கு மட்டும் நெருக்கடியா?: கராத்தே தியாகராஜன் கடும் விமர்சனம்

Published on

பிரதமர் மோடியை ஆதரித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அண்மையில்  கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத்தலைவராக பதவி வகித்துவந்த கராத்தே தியாகராஜன், அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கட்சி அண்மையில் தெரிவித்தது.

கே.என்.நேரு போன்றவர்கள் பேசியதால் திமுக- காங்கிரஸ் இடையே ஏற்பட்ட உரசலை அடுத்து, அதுகுறித்து தாமாக முந்திக்கொண்டு கராத்தே தியாகராஜன் ஊடகங்களில் பதிலளித்தார். அது காங்கிரஸ் தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்மீது நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தைப் பார்த்துவிட்டு வந்த  கராத்தே தியாகராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ''என்னை மட்டும் குறிவைத்து உள்நோக்கத்துடன் நீக்கியுள்ளார்கள். எந்த விளக்கமும் கேட்காமல் என்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரதமர் மோடியை ஆதரித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன்? ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் கொள்கையை எதிர்த்து நான் பேசவில்லையே.

நான் பேசியது தவறேனில், கூட்டத்தின்போதே  ஏன் அழகிரி என்னைக் கண்டிக்கவில்லை? ராகுலுக்குத் தெரிந்துதான் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியைக் கேட்டதால், அழகிரி என்மீது அதிருப்தியில் உள்ளார்.

காங்கிரஸ் சொத்தைக் கொள்ளையடித்தவர் கோபண்ணா. காமராசர் கிரவுண்டில் 500 சதுர அடி இடத்தை வைத்துக்கொண்டு 8 ஆயிரம் சதுர அடி நிலத்தை மடக்கிவைத்துக் கொண்டவர் கோபண்ணா. காமராசரின் பெயரில் புத்தகம் போட்டுக் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இந்த மாதிரியான ஆட்களை எல்லாம் கட்சிக்குள் வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளேன். அழகிரிக்குத் தெரிந்துதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ராஜீவ் காந்தியின் ரத்தத்தைப் பார்த்தவன் நான். ராகுலுக்கும் சிதம்பரத்துக்கும் என்றுமே விசுவாசமாக இருப்பேன்; எப்போதும் காங்கிரஸ் காரனாகத்தான் இருப்பேன்'' என்றார் கராத்தே தியாகராஜன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in