Published : 29 Jun 2019 11:45 AM
Last Updated : 29 Jun 2019 11:45 AM

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம்; கடந்து வந்த பாதை

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவர், டிஜிபி ஜேகே திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தப் பொறுப்பில் இரண்டு ஆண்டுகள் தொடர்வார்.

காவல் துறையில் மிக உயர்ந்த பதவியாகப் பார்க்கப்படுவது சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி ஆகும். தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரி 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால் அவர்கள் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். தமிழகத்தில் பல துறைகளுக்கும் டிஜிபிக்கள் இருந்தாலும் சட்டம் ஒழுங்கு டிஜிபி என்பதுதான் காவல்துறையின் உச்சபட்ச அதிகாரம் மிக்க பதவி ஆகும். அதை அடைவது ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியின் லட்சியமாக இருக்கும்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் நாளையுடன் முடிவதால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியைத் தேர்வு செய்யும் பணி மூன்று மாதக் காலத்திற்கு முன்பு ஆரம்பித்தது.

சட்டம் ஒழுங்கு டிஜிபி தேர்வு செய்வது குறித்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி  பதவிக்காலம் முடிய ஆறு மாத காலம் சர்வீஸ் உள்ள டிஜிபிகளின் பெயர்கள் மத்திய சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது .

அதில் முதலிடத்தில் இருந்தவர் ஜே.கே. திரிபாதி, பின்னர் மூன்று தகுதி வாய்ந்த டிஜிபி பெயர்களை யுபிஎஸ்சி  பரிந்துரை செய்து அனுப்பியது. அதன் அடிப்படையில் தமிழக அரசு திரிபாதியை புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்துள்ளது. நாளை மதியம் 12 மணியளவில் பதவியேற்கும் திரிபாதி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தொடர்வார்.

திரிபாதி கடந்து வந்த பாதை

தமிழக காவல்துறையில் திறமை வாய்ந்த, சர்ச்சையில் சிக்காத, அமைதியான அதிகாரி என்று பெயரெடுத்த திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்‌கழ‌த்தில் பட்‌டப்படிப்பை முடித்து, முனைவர் பட்டத்திற்குப் படித்து வந்தார். தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதற்காக 1983 ஆம் ஆண்டு சிவில் ‌சர்வீஸ் தேர்வை எழுதினார். காக்கிச்சட்டைப் பணியை விரும்பாத திரிபாதி ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டிருந்தார். ஆனால், 1983 ஆம் ஆண்டு தேர்வு எழுதியும் அவர் தேர்வாகவில்லை. அடுத்த ஆண்டும் ஐஐஎஸ் மட்டுமே திரிபாதிக்குக் கிடைத்தது. 1985 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக திரிபாதி தேர்வானார்.

நமக்கு காக்கிக்சட்டை தான் சரியான ஒன்று என்று முடிவு செய்த திரிபாதி ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தமிழக ஐபிஎஸ் அதிகாரி ஆனார். சட்டம் ஒழுங்கு எஸ்பியாக 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பணியாற்றி பெரிய அளவுக்கு அனுபவமும், திறமையும் பெற்றவர். டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற திரிபாதி முதல் முறையாக திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பொறுப்பே‌ற்றார். அங்கு தனது திறமையை நிரூபித்தார். ரவுடியிசத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்தார். அதே நேரம் பல ‌நல்ல திட்டங்களைக் கொண்டுவந்து மக்களிடையே பிரபலமானார்.

குடிசைகளைத் தத்தெடுப்பது, புகார் பெட்டிகள் அமைப்பது என நல்ல பல திட்டங்களை திருச்சியில் கொண்டுவந்தார். பின்னர் சென்னை காவல் ஆணையராக விஜயகுமார் பொறுப்பில் இருந்தபோது தென் சென்னை இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். சென்னை வந்தவுடன் முதல் வேலையாக அதிகாரம் செய்து கொண்டிருந்த ரவுடிகளை அடக்கினார்.

பிரபல ரவுடி வீரமணி உள்ளிட்ட முக்கிய தாதாக்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதன்மூலம் திரிபாதி ஊடக வெளிச்சத்திற்கு வந்தார். அனைவருடனும் இனிமையாகப் பழகக்கூடிய திரிபாதி அதிகாரத் தோரணை இல்லாமல் நடக்கக்கூடியவர். பின்னர் ஐஜியாகப் பதவி உயர்த்தப்பட்ட அவர் மணல்மேடு சங்கர் என்கிற பிரபல ரவுடியை என்கவுன்ட்டர் செய்தார். காவல் நிலையத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அவர் சிபிசிஐடி, ஐஜியாக மாற்றப்பட்டார்.

ஏடிஜிபியாக பதவி உயர்த்தப்பட்ட பின் 2011-ம் ஆண்டு  சென்னை மாநகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றினார்.

இவரது பணிக்காலத்தில் தென் சென்னை பகுதியில் அதிக அளவில் நடந்த வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட 5 வடமாநில வங்கி கொள்ளையர்கள் என்கவுன்ட்டர் விவகாரம் பெரிதானது. அதன்பின்னர் சிறைத்துறை ஏடிஜிபியாக பொறுப்பேற்ற அவர் அங்கு பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். சிறைக்கைதிகளைத் தத்தெடுப்பது, சிறைக் கைதிகளுக்கான பள்ளிகள், அவர்களுடைய மறுவாழ்வுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவது என்று பல சீர்திருத்தங்களை சிறைத்துறையில் கொண்டு வந்தார்.

பின்னர் சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு, டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று அதே பணியில் தொடர்ந்தார்.

திரிபாதிக்கு இரண்டு கூடுதல் சிறப்புகள் உள்ளன. இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்ற முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இவ‌ர்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத்திற்கான காமன்வெல்த் சங்கம்,‌ 'Innovation in Governance' என்ற தலைப்பில் திரிபாதிக்கு தங்கப் பதக்கத்தை வழங்கியது. வாஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச காவல்துறைத் தலைவர்கள் சங்கத்தின் சமூக காவல் விருதும் திரிபாதிக்குக் கிடைத்துள்ளது.பிரதமர் விருதை வாங்கிய முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமை பெற்றவரும் இவரே.

தனது 30 வருடக் காவல் பணியில்‌  பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார், திரிபாதி. இந்நிலையில் கூடுதல் சிறப்பாக தமிழக காவல் துறையின் உச்சபட்ச பதவியான சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x