Published : 29 Jun 2019 12:47 PM
Last Updated : 29 Jun 2019 12:47 PM

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம்: முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும்; கி.வீரமணி

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்கிற திட்டமிட்ட வரிசையில், ஒரே குடும்ப அட்டைத் திட்டம் என்பதை மத்திய அரசு அறிவித்திருப்பது, கூட்டாட்சித் தத்துவத்தை ஒழித்து, மாநில உரிமைகளைப் பறித்து, ஒற்றை ஆட்சி முறைக்கே வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட சலுகை விலையில் உணவுப்பொருட்கள் தருவதை மற்ற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றவர்களும் பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு என்று உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் வெளிப்படையாகக் கூறியுள்ளார்!

அந்தந்த மாநிலத்தின் உணவு நிலவரம், உணவு விநியோக முறை எல்லாம் ஒரே சீரான முறையில் இருக்கிறதா என்பது முதல் கேள்வி. மாநிலங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைகளிலும், திருட்டு, செயின் பறிப்பு, ரயில் கொள்ளை முதலிய பலவற்றிலும் ஈடுபடும் அதிகமான வெளிமாநிலத்துக் கும்பல்கள் இங்கே வீடு பிடித்து வாழ்வதோடு, விமானத்தில் வந்து ஆடம்பர ஒப்பனையோடு கொள்ளைகள் நடத்திய செய்திகளை யாரால் மறுக்க முடியும்?

தமிழக அரசு இப்பிரச்சினை, அதன் நிலைப்பாடு என்னவென்பதை தெளிவுபடுத்தி, இத்திட்டத்தை துணிவுடன் ஏற்க மறுக்க வேண்டும். தலையாட்டி விடக்கூடாது.

மாநிலத்தின் உரிமைப் பிரச்சினை தமிழ் மாநிலத்தின் உணவு உரிமை என்பதைவிட, தமிழகத்தின் உரிமைப் பிரச்சினை இது என்பதால், தெளிவுடனும், துணிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும்", என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x