

புதுச்சேரியில் சட்டப்பேரவை மற்றும் ஆளுநர் மாளிகை அருகே அமைந்துள்ளது அரசு பொது மருத்துவமனை. நகரின் முக்கிய மருத்துவமனையான இங்கு கடந்த டிசம்பர் 2015ம் ஆண்டு முதல் எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்படவில்லை.
15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட அந்த ஸ்கேன் மெஷின் பயன்படுத்த இயலாத கடைசி நிலை வரையில் பயன்படுத்தப்பட்டது. தேவை ஏற்படும் முன்பாகவே கோப்பு தயாரித்து சுகாதாரத்துறை அனுப்பாததுதான் முக்கியப் பிரச்சினையானது. இதுபற்றி சட்டப்பேரவையிலும் ஒவ்வொரு ஆண்டும் எம்எல்ஏக்களால் கேள்வி எழுப்பப்பட்டு, விரைவில் வாங்குவோம் என்று துறை அமைச்சர் தொடங்கி முதல்வர் வரை பதில் தருவது வழக்கம்.
புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் புதுச்சேரி மட்டு மில்லாது தமிழக நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் நோயாளிகள் இங்கு வந்து வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளியாகவும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். விபத்தில் படுகாயமடைந்து வரும் நோயாளிகளுக்கு தலையில் எங்கு அடிப்பட்டுள்ளது என்பதனை கண்டறியும் எம்ஆர்ஐ ஸ்கேன் இல்லாததுதான் படுமோசம்.
பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் தரப்பில் கூறுகையில், "அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்கேனுக்காக தனியார் மருத்துவ மனைக்கு அலையும் அலைச்சல் மிக மோசமானது. பல ஆண்டுகளாக ஸ்கேன் இயந்திரத்தை வாங்கவில்லை. ஸ்கேன் எடுக்க தனியார் மருத்துவமனையுடன் 'அவுட்சோர்ஸ்' செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
சுகாதாரத்துறை வட்டாரங்களில் இது பற்றி விசாரித்தபோது, "தற்போது இயந்திரத்தின் விலை ரூ.7 கோடி. தனி யார் மருத்துவமனையுடன் இணைந்து தற்போ தைய தேவையை பூர்த்தி செய்கிறோம். ஒரு ஸ்கேனுக்கு ரூ. 1,500 அரசு வழங்குகிறது. இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது" என்றனர்.
அமைச்சர் விளக்கம்
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவிடம் கேட்டதற்கு, "புதிதாக எம் ஆர் ஐ ஸ்கேன் வாங்கப்பட்டு ஜூலை 15 ம் தேதிக்குள் மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். சிறுநீரகக் கல் எடுக்கும் இயந்திரத்தின் பழுது சரி செய்யப்படும். மருந்துகள் பற்றாக்குறையும் போக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 81 நலவழி ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஒப்பந்த முறையில் மருத்துவர்கள் எடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
மருந்துகள் தட்டுப்பாடு
உயிர் காக்கும் மருந்துகளுக்கு இந்த அரசு மருத்துவமனையில் தட்டுப்பாடு நிலவுதால் நோயாளிகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் தனியார் மருந்தகங்களில் பணம் கொடுத்து மருந்துகள் வாங்க கூடிய சூழல் நிலவுகிறது. மேலும் சிறுநீரகக் கல் எடுக்கும் இயந்திரம் 6 மாதங்களாக பழுதாகியுள்ளன. இதனால் இங்கு வரும் நோயாளிகள் ஒரு கட்டத்தில் தனியார் மருத்துவமனைகளை நாடும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கிராமப்புற நோயாளிகள் தரப்பில் கூறுகையில், ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை. அதனால் இங்கு வருகிறோம். இங்கும் பல பிரச்சினைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டுகின்றனர்.