Published : 29 Jun 2019 09:31 PM
Last Updated : 29 Jun 2019 09:31 PM

தமிழக காவல்துறையில் உருவானது ‘சைபர் பிரிவு’: ஏடிஜிபி தலைமையில் 3 துணை ஆணையர்கள் நியமனம்

சைபர் சார்ந்த குற்றச்செயல்கள் பெருகி வருவதும், சைபர் கிரைம் சார்ந்த புலனாய்வு தேவையை ஒட்டி ‘சைபர் பிரிவு’ என காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு அதற்காக ஏடிஜிபி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருட்டு, குற்றச்செயல்கள் இன்று கணினி வழிச் சார்ந்ததாக, அறிவியல் பூர்வமாக நடக்கத் துவங்கிவிட்டது. கத்தியைக்காட்டித்தான் உங்கள் பணத்தை கொள்ளையடிக்கவேண்டும் என்பதல்ல கனிவாக போனில் பேசி எங்கிருந்தோ உங்கள் டேட்டாக்களை பெற்று ஒரு நொடியில் உங்கள் பணத்தை வழித்தெடுக்கும் நவீன திருடர்கள் உருவாகிவிட்டனர்.

உங்கள் டெபிட், கிரடிட் கார்டுகளை ஏடிஎம்மிலோ அல்லது ஷாப்பிங் மாலிலோ, ஹோட்டலிலோ தேய்க்கும்போது அதில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி டேட்டாக்களை சேகரித்து டூப்ளிகேட் கார்டு மூலம் பணத்தை திருடிவிடுகின்றனர். போனில் பேசி ஆதார் எண் பதிவு செய்யவேண்டும் எனக்கூறி தகவலைப்பெற்று ஒன்டைம் பாஸ்வார்டை அனுப்பி பேங்க் அக்கவுண்டில் உள்ள பணத்தை வழித்தெடுத்து விடுகிறார்கள்.

பெரிய நிறுவனத்தின் அனைத்து மெயில் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை ஹாக் செய்து தகவலை திருடுகின்றனர். பேஸ்புக்கில், ட்விட்டரில் ஆபாச படங்களை போடுவது, சிலரின் வீடியோ புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவது, வீடியோ பைரசி, திருட்டு விசிடி, வலைதளங்களில் பிரபலங்கள் போல் பொய்யான அக்கவுண்ட் ஆரம்பித்து சமூக பிரச்சினைகளை தோற்றுவிப்பது என சைபர் சார்ந்த குற்றச்செயல்கள் நாள்தோறும் வெவ்வேறு வடிவங்களில் வந்துக்கொண்டுத்தான் இருக்கின்றன.

இதேப்போன்று அரசாங்கத்தை முடக்க அதன் சேவை அமைப்புகளை முடக்குவது தகவல்களை திருடுவது போன்ற செயல்களால் அரசின் செயல்பாடுகள் முடங்கும் நிலையில் உள்ளது. இதேப்போன்று சமுதாயம் சார்ந்த குற்றங்களாக சமூக வலைதளங்களில் சாதி, மத, இன துவேஷத்தை தூண்டும் வகையில் பரப்புவதும் சமுதாய குற்றமாக பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற குற்றங்களை கண்டுபிடிக்க சென்னையில் மத்திய குற்றப்பிரிவில் சைபர் பிரிவு போலீஸாரும், மாவட்ட அளவிலும், மாநில அளவில் சிபிசிஐடியில் சைபர் பிரிவும் உள்ளது. ஆனால் இவைகளை வழக்கமான போலீஸார் கையாள்வதால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சைபர் குற்றங்களை கண்காணித்து பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இதை கணக்கில் எடுத்த காவல் உயர் அதிகாரிகள் வளர்ந்து வரும் டிஜிட்டல் மயமாதல் யுகத்தில், கணினி வழிச்சார்ந்த குற்றங்களை கலைய, இதற்கான தனித்துறையை உருவாக்க முடிவெடுத்தனர்.

தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, சிபிசிஐடி, பொருளாதார குற்றப்பிரிவு, ரயில்வே, கடலோர காவல்படை, சீருடைப்பணியாளர், லஞ்ச ஒழிப்புத்துறை என அந்தந்த பிரிவு சார்ந்த டிஜிபி மற்றும் ஏடிஜிபி தலைமையில் துறைகள் உள்ளது.

அதன் அடிப்படையில் இதுகுறித்து பல மட்டங்களிலும் பேசப்பட்டு அதற்கான செயல்வடிவம் கொடுக்கப்பட்டு தற்போது சைபர் பிரிவுக்கும் தனித்துறை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டமாக அதிகாரிகளை நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை காவல் துறை நிர்வாக ஐஜியாக இருந்த வெங்கட்ராமன் ஏடிஜிபி பதவி உயர்த்தப்பட்டு சைபர் பிரிவுக்கான ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கீழ் துணை ஆணையர் அந்தஸ்த்தில் சென்னையில் மூன்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடையாறு துணை ஆணையராக பணியாற்றிய செஷாங் சாய், நீலகிரி மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா, வேலூர் காவலர் தேர்வு பள்ளி ஏஎஸ்பி வீரராகவன் ஆகியோர் முறையே சைபர் பிரிவு துணை ஆணையர் 1,2,3 என நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏஎஸ்பி வீரராகவன் எஸ்பி ஆக பதவி உயர்த்தப்பட்டு சென்னை சைபர் பிரிவு எஸ்பி-3 ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார். 

சைபர் துறைக்காக காவல்துறையில் தனித்துறை உருவாகும்போது அதற்கு கீழ் அதிகாரிகள், மாவட்டந்தோறும் அதற்கென அலுவலகங்கள், அதில் நிபுணத்துவம் உள்ள போலீஸார் கொண்ட தனிப்பிரிவாக குற்ற வழக்குகளை கையாளுவதில் சைபர் பிரிவு வருங்காலத்தில் முக்கிய பிரிவாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

நாளுக்கு நாள் நவீனமாகும் காவல்துறையில் சைபர்பிரிவுக்காக தனிப்பிரிவு அதற்கு ஏடிஜிபி அளவிலான உயர் அதிகாரி தலைமை ஏற்கும்போது இன்னொரு மைல்கல்லை அடையும் என்பது நிச்சயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x