Published : 29 Jun 2019 04:29 PM
Last Updated : 29 Jun 2019 04:29 PM

சென்னையில் 200 வார்டுகளில் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு இலக்கு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், ஆய்வு செய்யவும் 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 2 இலட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து ரிப்பன் மாளிகை வளாகத்திலுள்ள அம்மா மாளிகையில் இன்று நடத்திய மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

“மழைநீர் சேகரிப்பு செய்முறை திட்ட விளக்க விழிப்புணர்வு” கையேட்டினை வெளியிட்டு அமைச்சர் பேசியதாவது:

“ நீர் ஆதாரங்களை புனரமைத்து புத்துயிர் அளிப்பதோடு, நிலத்தடி நீர்த்தேக்கங்களை மேம்படுத்தவும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் 2001-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. 2001-2006 ஆண்டு காலக்கட்டத்தில், இத்திட்டம் சிறப்பான முறையில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதால் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் கோவில் குளங்களை புனரமைக்கவும், நீடித்த நீர் பாதுகாப்பு திட்டத்தினை அவர் சட்டப்பேரவையில் 2015-ல் அறிவித்தார். மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.

பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் புத்துயிர் பெறுவது மட்டும் அல்லாமல் புதியவை அமைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, 8.05 இலட்சம் கட்டிடங்களில் 8.76 இலட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 2018-19-ல் மட்டும் புதியதாக 13,500 கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி, அலுவலக வளாகங்கள், பூங்காக்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் பூங்காக்களில் மழைநீரை சேகரித்து, அதை அந்த பூங்காக்களிலேயே பயன்படுத்துதல் மற்றும் கோவில் குளங்களை புனரமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த 2 ஆண்டுகளில் பராமரிப்பு இல்லாமல் இருந்த 210 நீர்நிலைகளை கண்டறிந்து, 53 நீர்நிலைகளை தூர்வாரி புனரமைக்கும் பணியை ரூ.20 கோடியில் மிக வேகமாக செயல்படுத்தி வருகிறது. மேலும் ரூ.16 கோடி மதிப்பீட்டில் வில்லிவாக்கம் ஏரி தற்போதைய நிலையிலிருந்து ஐந்து மடங்கு கொள்ளளவு அதிகப்படுத்த ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகள் முடிந்தவுடன் சேத்துப்பட்டு ஏரி போன்று ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அரசு நிதி மூலம் பணிகள் செய்வது மட்டுமின்றி, தனியார்களையும் இந்த நீர்நிலைகள் புனரமைக்கும் பணியில் கலந்துக்கொள்ள ஊக்கமளிக்கும் வகையில், அவர்களையும் தங்களுடைய சமூகபொறுப்பு நிதியிலிருந்தும் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்கள் சார்பிலும் பணிகள் செய்ய சுமார் 38 நீர்நிலைகள் ஒப்படைக்கப்பட்டு,இதில் 16 நீர்நிலைகளில் அவர்களின் பணிகள் எடுக்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது.

மழைநீர் சேகரிப்பு அவசியத்தையும், செயல்படுத்தும் விதங்களையும் விரிவான விளங்களுடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர் விழிப்புணர்வுகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து நகரங்களிலும் (Rain Water Harvesting Cell) மழைநீர் சேகரிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு உதவி வருகிறது.

தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு விதமான குடிநீர் திட்டப் பணிகளின் காரணமாக, கடந்து ஆண்டு மாநிலத்தில் பருவமழை பொய்த்த நிலையிலும், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் மற்றும் வீராணம் ஆகிய நீர்நிலைகளில் நீர் இருப்பு குறைந்த நிலையிலும், பொதுமக்களுக்கு அன்றாடம் 525 மில்லியன் லிட்டர் குடிநீரை தங்குதடையின்றி வழங்கி வருகிறது.

பருவமழைக் காலங்களில் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்கவும் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசு இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒவ்வொரு தனி மனிதனின் பங்களிப்பும் இருந்தால் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்த ஏதுவாக இருக்கும். அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முதல்வர் உத்தரவின் பேரில், தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படாத கட்டிடங்களில் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், சென்னை மாநகரின் வார்டு உதவிப் பொறியாளர், குடிநீர் உதவிப் பொறியாளர், வரி வசூலிப்பவர், குடிநீர் பணிமனை மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய 5 நபர்களை கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர் தலைமையிலும், சென்னை குடிநீர் வாரியத்தின் வட்டார பொறியாளர் தலைமையிலும், வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுக்களின் நடவடிக்கைளை மேற்பார்வையிட, ஒவ்வொரு மண்டலத்திற்கும் பெருநகர சென்னை மாநகராட்சிமற்றும் சென்னை குடிநீர் வாரியத்தை சார்ந்த தலைமைப் பொறியாளர் அல்லது கண்காணிப்பு பொறியாளர் ஒருவர்ஒருங்கிணைப்பு அலுவலராக (Nodal Officer) நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுக்களின் ஒட்டுமொத்த பணிகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையாளர்கள் மற்றும் வட்டார துணை ஆணையாளர்களால் கண்காணிக்கப்படும். முதற்கட்டமாக, இக்குழு வருகின்ற ஆகஸ்ட் 31-க்குள் தங்களது வார்டுகளில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்யும்.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத 1000 கட்டடங்களை கண்டறிந்து, அங்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திட உரிமையாளருக்கு ஆலோசனைகளையும், விழிப்புணர்வும் வழங்கும்.

இதன்மூலம் மொத்தமாக, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியின் அனைத்து 200 வார்டுகளிலும் சேர்த்து சுமார் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மாநகரப் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு, சிறு பழுதுகளால் பயன்பாடற்று இருந்தால் அவற்றை சரிசெய்ய இக்குழு பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்கவும், எதிர்கால தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும் தங்கள் இல்லங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்து அரசின் இம்முயற்சிக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

இதுபோன்ற ஒருங்கிணைந்த குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இம்மாத இறுதிக்குள் இதுபோன்ற கருத்தரங்குகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்/இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வரி வசூலிப்பாளர்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த செய்முறை பயிலரங்கம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

நீங்கள் அனைவரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து விவரங்களை தெளிவாக அறிந்து கொண்டு, அவற்றை செயல்முறைபடுத்த பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். இக்கருத்தரங்கம் பயனுள்ளதாக உங்களுக்கு அமையும் என்பதில் ஐயமில்லை”  என தெரிவித்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமான கதை

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமான கதை 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x