Published : 29 Jun 2019 01:17 PM
Last Updated : 29 Jun 2019 01:17 PM

முதல்வர் பழனிசாமி தண்ணீரை ஒளித்து வைத்திருக்கிறாரா? - கனிமொழி கேள்வி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை ஒளித்து வைத்திருக்கிறாரா என, திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பிராட்வேயில் உள்ள பிரகாசம் சாலையில் இன்று (சனிக்கிழமை), தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி பேசியதாவது:

"பல பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் 20-25 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. அந்த பணத்தைக் கொடுக்க தயாராக இருந்தாலும், தண்ணீர் கிடைக்காத சூழல் நிலவிவருகிறது. தமிழகத்தில் இப்படிப்பட்ட மோசமான நிலை உள்ளது. உலக நாடுகள் கவலையுடன் நம்மை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நிலைமையிலும் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று சொல்கிற ஒரு அரசு நடந்துகொண்டிருக்கிறது.

என்ன கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிற சூழ்நிலையில், ரயில் மூலம் தண்ணீர் அனுப்புகிறோம் என கேரள முதல்வர் கூறியும், தமிழகத்தில் தண்ணீர் இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தண்ணீர் எங்கே இருக்கிறது என தெரியவில்லை. முதல்வர் தண்ணீரை ஒளித்து வைத்திருக்கிறாரா என தெரியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சி செய்யும் கேரளாவில் இருந்து தண்ணீரை வாங்கினால், பிரதமர் மோடி கோபித்துக்கொள்வார் என, மக்களுக்கு தண்ணீர் கூட தமிழக அரசு வாங்கவில்லை.

மு.க.ஸ்டாலின் கேரள முதல்வரை தொடர்புகொண்டு தண்ணீர் அனுப்புங்கள் என கோரிக்கை விடுத்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கும் அக்கறை, முதல்வருக்கு இல்லை. தண்ணீரின்றி நிறுவனங்கள் மூடப்படுகின்றன, சமைக்க முடியவில்லை, பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடிவதில்லை. 1% தண்ணீர் தான் கையிருப்பு உள்ளது.

ஆனால், இதற்கு இடைக்கால தீர்வு, நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்காத அரசு நிச்சயம் நீடிக்கக்கூடாது. எல்லா விதங்களிலும் தமிழகம் பின்னோக்கிச் சென்றுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பின்மை, வேலைவாய்ப்பின்மை இதனை கூட சகித்துக்கொண்டிருந்தோம். ஆனால், இன்று தமிழ்நாடு பாலைவனமாக, சுடுகாடாக மாறக்கூடிய நிலை இந்த ஆட்சியில் உருவாகிக்கொண்டிருக்கிறது."

இவ்வாறு கனிமொழி பேசினார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x