Last Updated : 30 Jun, 2019 08:47 AM

 

Published : 30 Jun 2019 08:47 AM
Last Updated : 30 Jun 2019 08:47 AM

வலியை போக்குவதே சிறந்த சேவை!- ‘ஜெம்’ மருத்துவமனை டாக்டர் பழனிவேலு

பள்ளிப் படிப்பைத் தாண்ட முடியாதா? என்ற கவலையுடன் இருந்த என்னை, பிரபலமான  மருத்துவராக்கி இருக்கிறது வாழ்க்கை. சொந்த நாட்டில் வாழ வழியின்றி, மலேசியாவுக்கு கூலித்  தொழிலாளியாகப்போன ஒரு ஏழை விவசாயியின் மகனால், உலக அளவில் அங்கீகாரம் பெற முடிகிறபோது, உங்களால் முடியாதா? சூழ்நிலைகளின் போக்கில் போய்விடாமல்,  இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கிப் பயணித்தால் வெற்றி நிச்சயம்”  என்கிற டாக்டர் சி.பழனிவேலு, தன்னம்பிக்கையின் வாழும் சாட்சியாக விளங்குகிறார்.

வயிற்றைக் கிழித்து செய்யப்படுகிற அறுவைசிகிச்சை களுக்கு மாற்றாக,  சிறு துளைகள் இட்டு, உயிர்காக்கும் சிக்கலான அறுவைசிகிச்சைகளை செய்ய முடிகிற லேப்ராஸ்கோப்பி தொழில்நுட்பத்தை இந்திய அளவில் இரண்டாவதாக அறிமுகம் செய்தவர் டாக்டர் பழனிவேலு. அவர் உருவாக்கிய ஜெம்  மருத்துவமனை இன்று லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சைகளுக்கான ஆராய்ச்சி மையமாகவே திகழ்கிறது.

மாணவர் சங்க செயலாளர்!

“நினைத்ததை நடத்திக்காட்ட வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பேன். பல்வேறு தருணங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வெறியும், மருத்துவராக வேண்டும் என்ற கனவும் என்னைத் தூங்கவிடவே இல்லை. `கல்வி ஒன்றே கரை சேரும் வழி’ என்ற நினைப்புடன் படித்து, புகழ்பெற்ற சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மாணவனானேன். மருத்துவம் படிப்பவர்கள் கவனம் சிதறக்கூடாது என்று சொல்வார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு.  ரத்த தானம் தேவைப்பட்டால், மாணவர்களைத் திரட்டிக்  கொண்டுபோவது என் மனதுக்குப் பிடித்த வேலை. கல்லூரி மாணவர் சங்க செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். சமூகம் சார்ந்த போராட்டங்களில் முன்னெடுத்து இருக்கிறேன். அதேசமயம், படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதிலும் முழு கவனமாக இருந்தேன்.

திருமணமும், எம்.எஸ். படிப்பும்...

நன்றாகப் படிக்கிற என் மீது உமாபதி என்ற பேராசிரியருக்கு அக்கறையும், அன்பும் அதிகம். செயல் முறை தேர்வில் என்னைக்  கவனித்த அவர், ‘நல்ல சர்ஜனாக வருவே’ என்று  நம்பிக்கையுடன் கூறினார். எம்.பி.பி.எஸ்.  முடித்துவிட்டு, ஊரில்போய் செட்டிலாகி விட வேண்டும் என்று நினைத்த எனக்கு, உமாபதி அளித்த ஊக்கம், எம்.எஸ். படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. வீட்டில் திருமணம் செய்ய வலியுறுத்தினார்கள்.

முன்னேறுவதற்கு திருமணம் தடையாக இல்லாமல், துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்டேன். வாழ்க்கைத் துணையாக வந்த மனைவி, எனக்கு பெரிய பக்கபலமாக இருந்தார். மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். படிக்க இடம் கிடைத்தது. தங்கப் பதக்கத்துடன் எம்.எஸ். படிப்பை முடித்தேன்.

சொந்த மருத்துவமனையா? மேல்படிப்பா?

ஆனாலும், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் எனக்குள் குறையவே இல்லை. எம்.எஸ். படிப்பு முடிந்ததும், சேலத்தில் சொந்தமாக மருத்துவமனைகட்டி செட்டிலாகும் வாய்ப்பு வந்தது. அதேநேரம், இரைப்பை குடலியல் துறையில் சிறந்து விளங்கிய டாக்டர்  ரங்கபாஷ்யம், என்னை. ‘எம்.சி.ஹெச். கேஸ்ட்ரோ’ மேற்படிப்பில் சேரச் சொன்னார். மருத்துவமனையின் உரிமையாளராகும் வாய்ப்பை மறுத்து, மாணவனாக மீண்டும் படிக்க முடிவெடுத்தேன். ‘எம்.சி.ஹெச்.’ மேற்படிப்புக்கு சென்னை மருத்துவக்  கல்லூரியில் விண்ணப்பித்துக் காத்திருந்த எனக்கு,  ஏமாற்றமே மிஞ்சியது. அந்த வருடம் எனக்கு படிக்க இடம் கிடைக்கவில்லை. மேலும் ஒரு வருடம் காத்திருந்து, விடாமுயற்சியுடன் உயர்கல்வியில் சேர்ந்தேன். சுலபமாக எதுவும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு அடைவதால், அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது எனது இயல்பு.  எல்லோருடைய கவனமும் என் மீது பதியும்  அளவுக்கு, சிறந்த அறுவைசிகிச்சை நிபுணர் என்று பெயர் எடுத்தேன். எல்லோரும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வேலைசெய்ய ஆர்வம் காட்டும்போது, என் மனதுக்குப் பிடித்தமான கோவைக்கு இடமாறுதல் கேட்டு, விரும்பி வந்தேன்.

என் நெருங்கிய உறவினர், வயிற்றில் வலி இருப்பதாகச் சொல்லி என்னிடம் வந்தார். பரிசோதனையில் அவருக்கு குடல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றேன். ஆறு மாதம் கழித்து செய்து கொள்வதாக தட்டிக்கழித்தார். புற்றுநோயை முற்றவிடுவது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று எடுத்துச்  சொல்லி, அறுவசிகிச்சை செய்து குணப்படுத்தினேன். அவர் மருத்துவமனையில் இருந்தவரை, அவரது மனைவி அவரைப் பார்க்க வரவே இல்லை. அது என்னை மிகவும் உறுத்தியது.

சில மாதங்கள் கழித்து, அவர் மனைவியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, `என்ன அண்ணி, அண்ணனை ஆஸ்பத்திரிக்கு வந்து பார்க்கவே இல்லையே’ என்று கேட்டேன். `உங்க அண்ணன் கோயம்புத்தூர் வந்து படுத்துக்கிட்டார். இங்கே, அவர் வேலையையும் சேர்த்து நான்தானே செய்யணும்’  என்று ஆதங்கத்தைக் கொட்டினார்.  திருச்செங்கோடு தாண்டிப்  போகாத அவரை, கோவைக்கு அழைத்துவரவே இன்னொருவரின் உதவி தேவை என்ற யாதார்த்தம் எனக்குப் புரிந்தது. அன்றாட வாழ்க்கை முடங்கிவிடும் என்று கருதி, அறுவைசிகிச்சை செய்துகொள்வதையே உறவினர் தட்டிக் கழித்ததன் காரணமும் புரிந்தது.

தினமும் வேலைக்குச் சென்று சாப்பிடுகிற சாதாரண மக்கள், அறுவைசிகிச்சையால் மூன்று மாதம் வாழ்க்கை முடங்குவதைப் பார்த்து அஞ்சினார்கள். என்னை அது மிகவும் பாதித்தது. மருத்துவமனைக்கு வரும் ஒரு நோயாளி சீக்கிரமே வீடுதிரும்ப வழிசெய்ய வேண்டும் என்ற தீர்மானம் எனக்குள் வர காரணமாக இருந்தது அந்த நிகழ்வு.

அப்போது மருத்துவ உலகில் புதிதாக அறிமுகமான ‘லேப்ராஸ்கோப்பி’ தொழில்நுட்பத்தில், வயிற்றைக் கிழிக்காமல், சிறிய துளைகளின் மூலமே அறுவைசிகிச்சை செய்ய முடிகிற அளவுக்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டது.  மிகவும் ஆரம்ப நிலையில் இருந்தது அந்த தொழில்நுட்பம். இந்தியாவில் அறிமுகமாகாத நிலையில், சிங்கப்பூரில் லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை செய்ய சொல்லிக் கொடுத்தார்கள். இந்த வகுப்புக்கான கட்டணம் செலுத்த கையில் பணமில்லாமல், கடன் வாங்கிச் சென்று, கற்றுக்கொண்டு வந்தேன். லேப்ராஸ்கோப்பி தொழில்நுட்ப அறுவைசிகிச்சை இந்த நூற்றாண்டின் வரப் பிரசாதம் என்பதை என்னால் உணர முடிந்தது.

பொதுவாக, ஒரு பெரிய அறுவைசிகிச்சைக்குப் பிறகு குணமாகும் பலரும், முன்புபோல உழைக்க முடிவதில்லை என்று வருத்தமாக கூறுவார்கள். இதனால், அவர்களது  குடும்பமே பொருளாதார இழப்பை சந்திக்கிறது.  பொதுவான அறுவைசிகிச்சைக்குப் பிறகு தையல் பிரிப்பது, அடிக்கடி பரிசோதனைக்கு  வருவது என 3  மாதம் கழித்துதான் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப முடியும்.

அடுத்த நாளே எழுந்து நடமாடலாம்...

லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சையில், அடுத்த நாளே எழுந்து நடமாடலாம். நவீனத் தொழில்நுட்பத்தில், குறைந்த செலவில், தரமான சிகிச்சை என்ற என் கொள்கைக்கு லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை சரியான வடிவமாக இருந்தது. இதில், அறுவைசிகிச்சை முடிந்த அடுத்த நாளே நோயாளிகள் மகிழ்ச்சியாக வீடு திரும்புவதைப் பார்ப்பது, எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. அதனால், லேப்ராஸ்கோப்பி தொழில்நுட்பத்தில் என் தேடல் அதிகரித்தது. இருப்பதைக் கற்றுக்கொண்டு நிறைவடையாமல், மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய அறுவைசிகிச்சை வழிமுறைகளைக் கண்டறிந்தேன். உலகம் முழுவதும் அதற்கு வரவேற்பு கிடைத்தது.

உலக டாக்டர்களின் பாராட்டு!

2005 அக்டோபரில் `அமெரிக்கன் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ மாநாடு சான்ஃபிரான்சிஸ்கோவில் நடந்தது. உணவுக்குழாய் புற்றுநோய் சிகிச்சைக்கு நான் உருவாக்கிய லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை முறையை விளக்குவதற்கு அழைக்கப் பட்டேன். அங்குள்ள பிட்ஸ்பர்க் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர்,  உணவுக் குழாய் புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளில் தேர்ந்த நிபுணராக விளங்கினார். அந்தத் துறையில் அவர் சொல்வதுதான் இறுதி வார்த்தையாகக் கருதப்படும். அவரே, `டாக்டர் பழனிவேலுவின் வீடியோவைப் பார்க்கும்வரை, என் சிகிச்சை முறைதான் சிறந்தது என நான் நினைத்துக் கொண்டிருந்தேன்’ என்று கூறி, உலகின் பல நாடுகளில் இருந்து வந்திருந்த நிபுணர்களிடம் அறிமுகம் செய்தபோது, எனக்கு மெய்சிலிர்த்தது.

‘லேப்ராஸ்கோப்பி சர்ஜரியின் மெக்கா’

பிறகு, இந்தியா முழுவதுமிருந்து பல அறுவைசிகிச்சை நிபுணர்கள் கோவைக்கு வந்து,  லேப்ராஸ்கோப்பி கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட எல்லா நவீன அறுவைசிகிச்சைகளையும் கோவையில் செய்ய முடிந்தது.  ‘லேப்ராஸ்கோப்பி சர்ஜரியின் மெக்கா’ என கோவை மாநகரின் புகழ் பரவியது.

இந்தியாவிலேயே முதல்முறையாக  1992-ல் நான் அடிவயிற்று குடல் இறக்க (ஹெர்னியா) லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை மேற்கொண்டேன். 1992 முதல் 1996 வரையிலான காலத்தில் நான் நிறைய நவீன லேப்ராஸ்கோப்பி  அறுவைசிகிச்சை முறைகளைப் புதிதாக உருவாக்கினேன். அதற்குத் தேவைப்படுகிற நவீன கருவிகளையும் தனிப்பட்ட முறையில் வடிவமைத்தேன்.

பேராசிரியர் ரங்கபாஷ்யம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேசக்  கருத்தரங்கில், உலகப் புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியர் ஏ.ஆர்.மூஸா  கலந்துகொண்டார். ‘டாக்டர் பழனிவேலு செய்கிற  லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சைமுறை, அமெரிக்காவில்கூட எந்த மருத்துவரும் செய்யாதது’ என்று மனம் திறந்துப் பாராட்டினார்.

`விப்பிள்ஸ் மேன்’

உலகிலேயே முதன்முதலாக, கணையப் புற்றுநோய்க்காக செய்யப்படும் `விப்பிள்ஸ் ஆபரேஷனை’  முழுவதும் லேப்ராஸ்கோப்பி தொழில்நுட்பத்தில் நான் செய்து காட்டிய பிறகு,  ‘விப்பிள்ஸ் மேன்’ என எனக்கு மருத்துவ உலகம் பெயர் சூட்டியது. கத்தியே இல்லாமல் அறுவைசிகிச்சை செய்துகொள்வதை சாத்தியமாக்கியதும், சகஜமாக்கியதும் ஜெம் மருத்துவமனையின் சாதனை. வயிற்றை பல சென்டிமீட்டர் நீளத்துக்குக் கத்தியால் திறந்து, அறுவைசிகிச்சை செய்வதற்குப்  பதிலாக சில மில்லிமீட்டர் அளவுக்கு துளையிட்டு, நுண்துளை அறுவைசிகிச்சை எனப்படும் லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. சில துளிகள் மட்டுமே ரத்த இழப்பு, வலியும் குறைவு, நோய்த்தொற்று அபாயமும் இல்லை.

15 மணி நேரத்தில் 34 பேருக்கு...

மிகவும் சிக்கலான கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில், உயிருள்ள கொடையாளரிடமிருந்து லேப்ராஸ்கோப்பி முறையில் பாதி கல்லீரலைப் பிரித்தெடுத்து, இந்தியாவிலேயே முதன்முறையாக ஜெம் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மேற்கொண்டோம். அதேபோல, 15 மணி நேரத்தில்

34 பேருக்கு `ஹெர்னியா’ அறுவைசிகிச்சையை லேப்ராஸ்கோப்பியில் துல்லியமாக செய்து கின்னஸ் சாதனை படைக்க முடிந்தது.  இப்படி பல அறுவைசிகிச்சைகள் ’உலகிலேயே முதன்முதலாக,  இந்தியாவிலேயே முதன்முறையாக’ என ஜெம் மருத்துவமனையில் செய்யப்பட்டன. ஆபரேஷன் தியேட்டர்களிலும், உலகம் முழுவதும் நடக்கிற மருத்துவக் கருத்தரங்கிலும் என்னுடைய வாழ்நாள் கரைந்தது.

இந்தியா முழுக்க பயணம் செய்து, இரண்டு தலைமுறை மருத்துவர்களுக்கு லேப்ராஸ்கோப்பி நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க முடிந்ததை, கடவுளின் கருணையாகவே உணர்கிறேன்.  அனைவருக்கும் பரவலாக என்னுடைய புதிய அறுவைசிகிச்சை முறைகள் சென்றுசேர வேண்டும் என்பதற்காக புத்தகங்கள் எழுதினேன். உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்த்து, என் நூலைப் பாடமாகி கற்பிக்கின்றனர்.

எளிய மக்களுக்கு உயர்ந்த சிகிச்சை!

1991-ல் கோவையில் தொடங்கிய  ஜெம்  மருத்துவமனையின் மருத்துவ சேவை, ஈரோடு, திருப்பூர், திருச்சூர், சென்னை என்று வளர்ச்சி அடைந்துகொண்டேபோகிறது. ஒரு மருத்துவமனை எத்தனை பேருக்கு நிவாரணம் அளித்திருக்கிறது?

என்ற கேள்விக்கான பதில்தான், ஒரு மருத்துவ மனையின் வளர்ச்சியைக் குறிக்கும்.

 `எளிய மக்களுக்கு  உயர்ந்த சிகிச்சை’ என்ற ஜெம் மருத்துவமனையின் கொள்கையை, அடுத்த தலைமுறையினரும் கடைப்பிடிப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மருத்துவமனையின் நிர்வாகப் பொறுப்பை மனைவி ஜெயா ஏற்று நடத்தவில்லை என்றால், உலகம் முழுவதும் என்னால் பயணித்திருக்க முடியாது. அறுவைசிகிச்சையிலும் கவனம் செலுத்தியிருக்க முடியாது. மகன் டாக்டர் பிரவீன்ராஜ், மருமகன் டாக்டர் செந்தில், மகள் ப்ரியா ஆகியோர் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் ஜெம் மருத்துவமனையை நடத்துகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு இலவசமாக அறுவைசிகிச்சைகள் செய்திருக்கிறோம். லேப்ராஸ்கோப்பி தொழில்நுட்பத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள்,  பெரிய பொருளாதார இழப்பைத் தவிர்ப்பதுடன், தேவையற்ற அலைச்சல், மனஉளைச்சல், வலி என பல இன்னல்களில் இருந்து விடுபட முடிகிறது. இந்த தொழில்நுட்பத்தை விரிவாக்கி,  இன்னும் குறைந்த கட்டணத்தில் லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சைகளை மேற்கொள்வதே ஜெம் மருத்துவமனையின் லட்சியம். எங்கள் மருத்துவக் குழுவும், நிர்வாகமும் இதற்காகவே தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறது.

என்னை நம்பி வரும் நோயாளிகள் என் மீது வைக்கிற நம்பிக்கை, என்னை நெகிழ வைக்கும். ஒருமுறை கோவையில் நான் செய்த அறுவைசிகிச்சையை, மும்பையில் உள்ள மருத்துவர்கள் நேரடியாக வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தேன். இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் மருத்துவர்கள் மும்பைக்கு வந்திருந்தார்கள். ஆனால், தொழில்நுட்பக்  கோளாறு ஏற்பட்டு, கோவையில் இருந்து நேரடியாக ஒளிபரப்ப முடியாத சங்கடம் உருவானது.

மும்பை சென்ற புற்றுநோயாளிகள்!

நோயாளிகளிடம் ‘நாளை மும்பைக்கு வந்து,  ஆபரேஷன் செய்து கொள்ள சம்மதமா?’ என்று கேட்டேன். ஒருகணமும் யோசிக்காமல்,  அத்தனை பேரும் சம்மதித்தனர்.  குடல் வயிற்றுப் புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை செய்து கொள்ளப் போகிறவர்கள், கோவையிலிருந்து விமானம் மூலம் பயணித்து, அச்சமின்றி மும்பைக்கு வந்திறங்கியதை அங்குள்ளவர்கள் நம்ப முடியாமல் பார்த்தனர்.

மற்றவர்களின் வலியைப் போக்குவதுதான் சிறந்த சேவை என்பதை, அறுவைசிகிச்சை முடிந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் ஒவ்வொரு நோயாளியின் முகத்தைப் பார்க்கும்போதும் உணர்கிறேன். அதனால், என் வீடு, என் கோயில், என் உலகம் என எல்லாமுமாக ஆபரேஷன் தியேட்டர்  மாறிவிட்டது” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் லேப்ராஸ்கோப்பி பிதாமகன் டாக்டர் பழனிவேலு. கலப்பைப் பிடித்து உழுத அவரது கைகள் செய்யும் அறுவை சிகிச்சைகளின் யுக்திகளை, மருத்துவ உலகம் ஆர்வமுடனும், வியப்புடனும் கவனிக்கிறது. ஆனால், அவர் இன்னும் கற்றுக்கொள்ளும் ஆர்வத் துடிப்புமிக்க மாணவராகவே இருக்கிறார்.

அடுத்த சாம்ராஜ்யம்... அடுத்த வாரம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x