

தமிழகத்தில் அழிந்து வரும் நாட்டுப்புற கலைகள், தற்காப்பு கலைகளைப் பள்ளி மாணவர்களுக்கு ராமநாதபுரம் இளைஞர் இலவசமாகக் கற்றுத் தருகிறார்.
தமிழக வரலாற்றில் தடம் பதித்த பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தற்காப்புக் கலைகளான சிலம்பம், வாள் வீச்சு, தீப்பந்தம் விளையாட்டு ஆகிய கலைகள் தற்போது அழிவை நோக்கிச் செல்கின்றன. மாணவர்கள் இக்கலைகளை மறந்து மொபைல்போன் மோகத்தில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக சமூக வலைதளங்களிலும், கணினி விளையாட்டுகளிலும் நேரத்தை கழிக்கின்றனர். இதனால் மாணவர்களின் மனநலம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
இதில் இருந்து மாணவர்களைக் காப்பாற்றும் நோக்கிலும், தான் கற்ற கலையை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணத்திலும் ராமநாதபுரம் நாகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த லோக சுப்பிரமணியன் என்ற இளைஞர், சிலம்புக் கலையை ஊக்கப்படுத்தும் விதமாக சிலம்பொலி என்ற பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இங்கு மாணவர்களை ஒருங்கிணைத்து நாட்டுப்புறக் கலைகளான ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம் பாட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்டவற்றை கற்றுத் தருகிறார்.
இவரது ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் பார்த்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை நாட்டுப்புறக் கலை பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர். மாணவர்களும் இக்கலைகளை ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது. லோக சுப்பிரமணியன் மாணவர்களுக்கு அனைத்து நாட்டுப்புறக் கலைகளையும் 20 ஆண்டுகளாக இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
நமது கலாச்சாரத்தில் நாட்டுப்புறக் கலையும், தற்காப்புக் கலையும் முக்கிய பங்காற்றியுள்ளன. தற்போது தமிழ்ச் சமுதாயம் அவற்றை மறந்து வருகிறது. நமது கலாச்சாரம் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக நகர்ப்புற மாணவர்களுக்கு இக்கலையை இலவசமாகக் கற்றுக் கொடுத்து வருகிறேன். ஆயிரம் மாணவர்கள் வந்தாலும் என்னால் இலவசமாகப் பயிற்சி அளிக்க முடியும்.
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் அவசியம். எனவே பெண் குழந்தைகளுக்கும் சிலம்பம், வாள் வீச்சு, தீப்பந்தம் விளையாட்டுகளை கற்றுக் கொடுத்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளை தமிழகம் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று தமிழகத்தின் கலை, பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் மேடை அரங்கேற்றம் செய்து வருகிறேன் என்றார்.