

கட்சியில் எல்லோரையும் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று பதவியேற்றார். இதையடுத்து அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பெரியார், காமராஜர் மற்றும் மூப்பனார் நினைவிடங்களிலும் அம்பேத்கர் (கோடம்பாக்கம்), ராஜீவ் காந்தி (சின்னமலை), வாழப்பாடி ராமமூர்த்தி (ஆர்.ஏ.புரம்), சிவாஜி கணேசன் (மெரினா) ஆகியோரின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அதைத் தொடர்ந்து மீண்டும் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிற்பகல் 3 மணியளவில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவரை வாசலுக்கு வந்து இளங்கோவன் வரவேற்றார்.
அங்கிருந்த தொண்டர்களி டையே ப.சிதம்பரம் பேசியதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி என்பது மிக உயர்ந்த பதவி. மிகப்பெரிய தலைவர்கள் இந்தப் பொறுப்பை வகித்து பெருமை சேர்த்துள்ளனர். அப்படிப்பட்ட பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு எனது பாராட் டுகளையும், நல்வாழ்த்துகளையும் மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் என்பவர் எல்லோருக் கும் பொதுவானவர். கட்சியில் பெரியவர், சிறியவர் என்று கருதாமல் எல்லோரையும் கலந்துபேசி முடிவுகளை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் எல்லோரும் ஒற்றுமையாக தலைமைக்கு துணையாக இருந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். நாட்டைப் பற்றி , நாட்டு அரசியலைப் பற்றி, அகில இந்திய அளவிலே நமக்குள்ள சவால்களைப் பற்றி பேசுவதற்கான நேரம் இப்போது இல்லை. அதற்கான காலம் வரும்போது அதுகுறித்து விரிவாக பேசுவேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய செயலாளர் தீபக், முன்னாள் எம்எல்ஏ யசோதா, கார்த்தி சிதம்பரம், தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரண்டரை ஆண்டுக்கு பிறகு...
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வாழ்த்து வதற்காக ப.சிதம்பரம் நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நேற்று பவனுக்கு வந்த சிதம்பரத்தை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.